ரமலான் மாதத்தில் 10,500 பேருக்கு $4.3 மில்லியன் உதவி

ரமலான் மாதத்தில் 10,500 பேருக்கு $4.3 மில்லியன் உதவி

2 mins read
30324a90-43fb-4805-8048-b27f40a889a1
(இடமிருந்து) முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் டாக்டர் முகமது ஃபை‌‌‌ஷால் இப்ராஹிம், அதிபர் தர்மன் சண்முகரத்னம், பள்ளிவாசல் தலைமை நிர்வாகி திரு எட்வான் நிஸார் அஹாடான் ஆகியோர் அல்-மவாடா பள்ளிவாசலில் நோன்பு துறந்தனர். - படம்: பெரித்தா ஹரியான்

ரமலான் மாதத்தில் $4.3 மில்லியன் மதிப்புடைய ஆதரவுத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் 10,500 பேருக்கு உதவிகள் வழங்கப்படும் என்று முஸ்லிம் விவகாரங்களுக்கான தற்காலிக அமைச்சர் இணைப் பேராசிரியர் டாக்டர் முகமது ஃபை‌‌‌ஷால் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

மாதாந்தர ஸகாத் ஆதரவுத் திட்டத்தில் உள்ளோர், நல்வாழ்வு இல்லங்களில் உள்ள முஸ்லிம் குடியிருப்பாளர்கள், காம்கேர் நீண்டகால உதவியைப் பெறுவோர், குடும்ப நலச் சேவை நிலையங்களால் பரிந்துரைக்கப்படுவோர், வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த முஸ்லிம் உயர்கல்வி மாணவர்கள் ஆகியோருக்கு நிதி வழங்கப்படும்.

அந்த 2026ஆம் ஆண்டுக்கான தொகுப்புத் திட்டம், $3.6 மில்லியன் ஸகாத் நிதியாலும் ஃபித்யா நன்கொடை மூலம் பெறப்பட்ட $800,000 நிதியாலும் உருவாக்கப்பட்டது.

தேவையுள்ளோருக்காக முஸ்லிம் சமூகத்திலிருந்து பெறப்படும் நிதி ஸகாத் என்றும் ரமலான் மாதத்தின்போது உடல்நலக் குறைவு போன்ற காரணங்களுக்காக நோன்பு இருக்க முடியாமல் போன முஸ்லிம்கள் செலுத்தும் தொகை ஃபித்யா என்றும் அறியப்படுகிறது.

சமூகத்தில் உள்ளோரை உயர்த்த முஸ்லிம்கள் கொண்டுள்ள கூட்டு முயற்சியை ஸகாத் பிரதிபலிப்பதாக டாக்டர் ஃபை‌‌‌ஷால் குறிப்பிட்டார்.

புவாங்கோக்கில் உள்ள அல்-மவாடா பள்ளிவாசலில் அதிபர் தர்மன் சண்முகரத்னத்துடன் நோன்புத் துறக்கும் நிகழ்வில் கலந்துகொண்டார் டாக்டர் ஃபை‌‌‌ஷால்.

சமூகத் தலைவர்கள், நிதியாதரவு பெறுவோர் என 100 பேருடன் அவர்கள் நோன்பு துறந்தனர். கடந்த ஆண்டு நோன்பு மாதத்தில் $3.08 மில்லியன் நிதி மூலம் 8,200 பேர் பயனடைந்தனர். 2024ஆம் ஆண்டு $2.6 மில்லியன் நிதி மூலம் 8,600 பேர் பயனடைந்தனர்.

சிங்கப்பூர் இஸ்லாமியச் சமய மன்றம் (முயிஸ்) கடந்த ஆண்டு டிசம்பரில் 6,000க்கும் அதிகமான குடும்பங்களுக்கும் 8,000 பிள்ளைகளுக்கும் $4.3 மில்லியன் நிதியை வழங்கி உதவியது.

2012ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படும் அந்த நிதியுதவி, புதிய பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்குக் கைகொடுக்கிறது.

“காலத்திற்கு ஏற்ற உதவியைச் செய்வதில் முஸ்லிம் சமூகம் உறுதியுடன் இருப்பதை இத்தகைய நிதியாதரவு வெளிப்படுத்துகிறது,” என்று டாக்டர் ஃபை‌‌‌ஷால் குறிப்பிட்டார்.

பள்ளிவாசல்களும் முஸ்லிம் சமூகத்துக்கு உதவுவதில் முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறிய அவர், குடும்பங்களுக்கு நேரடியாகப் பலசரக்குப் பொருள்களை வழங்கும் முயற்சிகளை அவை மேற்கொள்வதாகக் கூறினார்.

குறிப்புச் சொற்கள்