கிங் ஆல்பர்ட் பார்க் வட்டாரத்திலுள்ள ஆடம்பர பங்களா ஒன்றில் புகுந்த மூகமூடிக் கொள்ளையர்கள் அங்கிருந்த 11 பேரைக் கட்டிப்போட்டு கொள்ளையடித்தனர். கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற அந்தச் சம்பவத்தில் ஏழு பேரைக் கொண்ட கொள்ளையர் கும்பல் அரிவாள்களையும் பேஸ்பால் மட்டைகளையும் ஆயுதங்களாகப் பயன்படுத்தியது.
பெரும்பாலும் மின்னிலக்க நாணய வடிவிலிருந்த $4.9 மில்லியன் மதிப்பிலான சொத்துகளைக் கொள்ளையடித்த கும்பல் இரண்டு வெவ்வேறு கார்களில், தனித்தனி சோதனைச்சாவடிகள் வழியாக உடனடியாக சிங்கப்பூரை விட்டு வெளியேறியது.
கொள்ளையர்கள் எழுவரில் அறுவருக்கு திங்கட்கிழமை (செப்டம்பர் 14) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஆயுதமேந்திய கும்பல் கொள்ளை, கொள்ளையடிக்கப்பட்ட பொருள்களை சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குக் கடத்தியதன் மூலம் கள்ளப்பண நடவடிக்கையில் ஈடுபட்டது ஆகிய குற்றச்சாட்டுகளை அவர்கள் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து தண்டனை விதிக்கப்பட்டது.
ஏழாவது சந்தேக நபர் இன்னும் பிடிபடவில்லை; அவர் தாய்லாந்தில் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இந்தக் கொள்ளைச் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்ட 35 வயது வோங் சி சான், 30 வயது கோ பூன் டோங் இருவருக்கும் தலா 12 ஆண்டுகள் 11 மாதச் சிறைத்தண்டனை, 24 பிரம்படிகள் மற்றும் $4,000 அபராதம் விதிக்கப்பட்டன.

