நான்கு பங்ளாதேஷியர்கள், ஒரு சிங்கப்பூரர் கைது

1 mins read
efccec96-f133-4f21-9c6a-5b72bfa36d29
-

குடிநுழைவு சம்பந்தப்பட்ட குற்றங்களின் தொடர்பில் ஐந்து பேர் தனியார் குடியிருப்புகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாகப் பணியாற்றும் ஊழியர்களை பணியில் அமர்த்துவதற்கும் தங்குவதற்கு இடம் அளிப்பதற்கும் எதிராக முதலாளிகளையும் வீட்டு உரிமையாளர்களையும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

அனுமதிக்கப்பட்ட காலத்திற்கு மீறி இந்நாட்டில் தங்கியது, குடிநுழைவுச் சட்டங்களை மீறிய வெளிநாட்டினரை வேலையில் அமர்த்தியது உள்ளிட்ட குற்றங்களுக்காக 25 வயதுக்கும் 57 வயதுக்கும் இடைப்பட்ட சிங்கப்பூரர் ஒருவரும் நான்கு பங்ளாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் தெரிவித்தது.

கடந்த வியாழக்கிழமையன்று நடத்தப்பட்ட சோதனையின்போது அந்த ஆடவர்கள் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது பிடிப்ட்டனர். இந்தச் சந்தேக நபர்களின் நடவடிக்கையை குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் விசாரித்து வருகிறது.

குடிநுழைவுச் சட்டத்தை மீறியோரை வேலையில் அமர்த்தும் குற்றத்திற்கு ஒருவருக்கு குறைந்தது ஆறு மாத சிறைத்தண்டனையுடன் 6,000 வெள்ளி வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.

அனுமதிக்கப்பட்ட காலத்தை மீறி இங்கு தங்குவோருக்கு ஆறு மாதம் வரையிலான சிறைத்தண்டனையுடன் குறைந்தது மூன்று பிரம்படிகள் விதிக்கப்படலாம்.

"சிங்கப்பூரின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முதலாளிகளுக்கும் வீட்டு உரிமையாளர்களுக்கும் பங்கு உள்ளது. வெளிநாட்டினரை வேலையில் அமர்த்துவதற்கும் வாடகை விடுவதற்கும் முன்னர் அவர்களின் பின்னணி என்ன என்பதை ஆராயவேண்டும் என்று நினைவுடுப்படுத்த விரும்புகிறோம்," என்றது ஆணையம்.