சிங்கப்பூரர்கள் அடுத்த ஆண்டு (2025) ஏப்ரல் மாதம் முதல் படிப்படியாக அமலுக்கு வரவிருக்கும் மெடிஷீல்டு லைஃப் சந்தா உயர்வைச் சமாளிக்க உதவும் நோக்கில் $4.1 பில்லியன் ஆதரவுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு அக்டோபர் 15ஆம் தேதி அதை அறிவித்தது.
ஆதரவுத் திட்டத்தின்கீழ், அடுத்த மூன்று ஆண்டுகளில் $700 மில்லியன், சந்தா மானியத்தை மேம்படுத்த ஒதுக்கப்படும். மேலும் $3.4 பில்லியன் கூடுதல் மெடிசேவ் நிரப்புதொகைக்குப் பயன்படுத்தப்படும் என்று அமைச்சு கூறியது.
2028ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சந்தாத் தொகை சராசரியாக 22 விழுக்காடு உயர்ந்திருக்கும்.
எனவே, வயது முதிர்ந்தோர் பிரிவிலுள்ள குறைந்த, நடுத்தர வருவாய் ஈட்டும் சிங்கப்பூரர்களின் சந்தா மானியம் ஐந்து முதல் பத்து விழுக்காட்டுப் புள்ளிகள் உயர்த்தப்படும்.
இந்தப் பிரிவிலுள்ளோர் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 60 விழுக்காட்டுத் தொகையை மானியமாகப் பெறுவர். தற்போது அந்த விகிதம் 50 விழுக்காடாக உள்ளது.
முன்னோடித் தலைமுறையைச் சேர்ந்த 75 வயது அல்லது அதற்கு மேற்பட்ட சிங்கப்பூரர்களுக்கு வருடாந்தர மெடிசேவ் நிரப்புதொகை $300 வரை உயரும். அதிகபட்சமாக அவர்கள் ஆண்டுக்கு $1,200 வரை மானியமாகப் பெறுவர்.
முன்னோடித் தலைமுறைத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் அடுத்த ஆண்டு 90 அல்லது அதற்குமேல் வயதுடையோரின் மெடிஷீல்டு லைஃப் சந்தாத்தொகை முழுவதையும் செலுத்துமளவிற்கு வருடாந்தர நிரப்புதொகையும் மானியங்களும் இருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
90க்குக் குறைவான வயதுடையோருக்கு மூன்றில் இரண்டு பங்கு சந்தாத் தொகைக்கு ஈடான இத்தகைய நிதியுதவி வழங்கப்படும் என்று அமைச்சு சொன்னது.
இவ்வேளையில், மாஜுலா தொகுப்புத் திட்டத்தின்கீழ் 1973 அல்லது அதற்குமுன் பிறந்த சிங்கப்பூரர்களுக்கு ஒருமுறை மட்டும் வழங்கப்படும் மெடிசேவ் போனஸ் தொகை $500 கூடுதலாக $2,000ஆக வழங்கப்படும்.
1950க்கும் 1973ஆம் ஆண்டுக்கும் இடையே பிறந்தோரில் குறைவான மெடிசேவ் தொகை கொண்டுள்ளவர்களுக்குக் கூடுதலாக $500 அடுத்த ஆண்டு வழங்கப்படும்.
1974க்கும் 2003ஆம் ஆண்டுக்கும் இடையே பிறந்தவர்களுக்கு டிசம்பர் ஒருமுறை மட்டும் வழங்கப்படும் மெடிசேவ் போனஸ் தொகை அதிகபட்சமாக $500க்கு உயர்த்தப்படும். தற்போது அந்த வரம்பு $300ஆக உள்ளது.
சிங்கப்பூரர்களுக்குப் புதிதாகப் பிறக்கும் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் மெடிசேவ் மானியம் $4,000லிருந்து $5,000ஆக உயர்த்தப்படும். இது அவர்களின் 21வது வயது வரை மெடிஷீல்டு லைஃப் சந்தாவைச் செலுத்தப் போதுமானதாய் இருக்கும்.