முறையான வேலை அனுமதி அட்டைகளின்றி ‘ஃபுட்பாண்டா’, ‘டிலிவரூ’ போன்ற நிறுவனங்களுக்காக உணவு விநியோக ஓட்டுநர்களாகப் பணியாற்றிய வெளிநாட்டினர் நால்வர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதற்கு உடந்தையாய் இருந்ததாக சிங்கப்பூர் நிரந்தரவாசிகளான மூன்று ஆடவர்கள்மீதும் குற்றஞ்சாட்டப்பட்டது.
மலேசியர்கள் இங் டெய்க் சுவான், 36, சோ சூன் யாவ், 28, முகமது சியாஸுவான் ஷாரில், 27, இந்தியாவைச் சேர்ந்த 38 வயது அமானுல்லா ஃபைஸால் நவாஸ் ஆகியோர் அந்த நால்வர்.
அவர்கள்மீது, வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்புச் சட்டத்தின்கீழ் தலா ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இங், ‘மில்க்ரன்’, ‘லைஃப் எக்ஸ்பிரஸ்’ ஆகிய நிறுவனங்களுக்கு உணவு விநியோக ஓட்டுநராகப் பணிபுரிந்ததாக மனிதவள அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அமானுல்லா, தனது நண்பருக்குச் சொந்தமான கணக்கைப் பயன்படுத்தி ‘ஃபுட்பாண்டா’வுக்கு வேலை செய்ததாகக் கூறப்படுகிறது.
தனது சகோதரரின் கணக்கைப் பயன்படுத்தி ‘டிலிவரூ’ நிறுவனத்துக்காக உணவு விநியோகித்ததாக சோமீது குற்றம்சாட்டப்பட்டது.
சியாஸுவான், தனது முன்னாள் சக ஊழியருக்குச் சொந்தமான கணக்கின்கீழ் ‘டிலிவரூ’ நிறுவனத்துக்குப் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது.
அவர்கள் நால்வரும் குற்றங்களை ஒப்புக்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.