$180,000க்குமேல் சிகரெட் வரி ஏய்ப்பு; நால்வர் மீது குற்றச்சாட்டு

$180,000க்குமேல் சிகரெட் வரி ஏய்ப்பு; நால்வர் மீது குற்றச்சாட்டு

1 mins read
a40f496b-945c-4c6b-95e6-100b60564182
வேனில் கண்டெடுக்கப்பட்ட தீர்வை செலுத்தப்படாத கள்ள சிகரெட்டுகள். - படம்: சிங்கப்பூர் சுங்கத்துறை

சிங்கப்பூர் சுங்கத்துறை, தீர்வை செலுத்தப்படாத 1,740 அட்டைப்பெட்டிகளில் அடைக்கப்பட்ட சிகரெட்டுகளைப் பறிமுதல் செய்ததைத் தொடர்ந்து, மலேசியர்களான ஆடவர்கள் நால்வர் மீது நீதிமன்றத்தில் ஜூன் 8ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டது.

அந்த கள்ள சிகரெட்டுகளின் மொத்த வரி ஏய்ப்பு $180,000க்குமேல்.

துவாஸ் வியூ கிரசெண்ட்டில் நடந்த திடீர் சோதனைக்குப் பிறகு, 27 வயதுக்கும் 42 வயதுக்கும் இடைப்பட்ட அந்த ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். ஒரு லாரியிலிருந்து ஒரு வேனுக்கு அந்த கள்ள சிகரெட்டுகளை மாற்றும் நடவடிக்கையில் அந்த ஆடவர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

தீர்வை செலுத்தப்படாத அந்த சிகரெட்டுகளை அந்த லாரி ஓட்டுநர் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்பட்ட மற்ற பொருள்களுக்குள் அந்த சிகரெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டன. அவற்றைப் பெற்றுக்கொள்ள அந்த வேன் ஓட்டுநரும் வேறு இருவரும் இதில் சம்பந்தப்பட்டனர்.

தீர்வை, பொருள் சேவை வரி ஏய்ப்பின் மொத்த மதிப்பு $188,241.

தீர்வை செலுத்தப்படாத பொருள்களை வாங்குவது, விற்பது, விநியோகிப்பது, வழங்குவது, சேமிப்பது, வைத்திருப்பது அல்லது கையாள்வது, சுங்கத்துறைச் சட்டம் மற்றும் ஜிஎஸ்டி சட்டத்தின்கீழ் கடுமையான குற்றங்கள் என்று சிங்கப்பூர் சுங்கத்துறை தெரிவித்துள்ளது.

குற்றம் நிரூபிக்கப்படுவோருக்கு தீர்வை மற்றும் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்யப்பட்ட தொகையைவிட 40 மடங்கு அபராதம், ஆறு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

அத்தகைய குற்றங்கள் புரிய பயன்படுத்தப்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்படலாம்.

குறிப்புச் சொற்கள்