பாதுகாக்கப்பட்ட இடங்களில் வானூர்திகளை இயக்கியதாக நால்வர்மீது குற்றச்சாட்டு

2 mins read
0550ff8c-e884-42e3-a6c9-d9ffa31bd9ae
பாதுகாக்கப்பட்ட இடத்தில் ஆளில்லா வானூர்திகளை இயக்கும் குற்றத்திற்காக, முதல் முறை அத்தகைய குற்றத்தைப் புரிவோருக்கு ஈராண்டுகள் வரை சிறைத்தண்டணை அல்லது $50,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாதுகாக்கப்பட்ட இடங்களில் ஆளில்லா வானூர்திகளை இயக்கியதாக நான்கு ஆடவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அவர்களில் மூவர், மரினா பே வட்டாரத்தில் அவ்வாறு செய்ததாகக் கூறப்படுகிறது.

‘ஹேவ்லாக் ஸ்குவேரில்’ உள்ள அரசு நீதிமன்றக் கட்டடத்திற்கு அருகில் ஆளில்லா வானூர்தி ஒன்றை இயக்கியதாக நான்காவது நபர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

டியோ கியன் ஹெங், 56, பிப்ரவரி 9ஆம் தேதியன்று புகைப்படம் எடுப்பதற்காக இரவு ஒன்பது மணி அளவில் மரினா பே பகுதியில் ஆளில்லா வானூர்தி ஒன்றை இயக்கியதாகக் கூறப்படுகிறது.

பிரிட்டனைச் சேர்ந்த சிங்கப்பூர் நிரந்தரவாசியான யி டிங் சோங், 45, மரினா அணைக்கட்டுப் பகுதியில் பிப்ரவரி 27ஆம் தேதி கடல்மட்டத்திற்கு மேல் கிட்டத்தட்ட 470 மீட்டர் உயரத்தில் ஆளில்லா வானூர்தி ஒன்றை இயக்கியதாகக் கூறப்படுகிறது.

மற்றொருவர் சீனாவைச் சேர்ந்த ஸோங் ஸென்ஷெங், 68. அவர் அதே பகுதியில் ஜூன் 25ஆம் தேதி மாலை 5.30 மணிவாக்கில் கடல்மட்டத்திற்கு மேல் ஏறக்குறைய 150 மீட்டர் உயரத்தில் ஆளில்லா வானூர்தியை இயக்கியதாகக் கூறப்படுகிறது.

சிங்கப்பூரரான சோங் யொங் ஷெங், 51, ஜூன் 23ஆம் தேதி இரவு 9.15 மணி அளவில் அரசு நீதிமன்றக் கட்டடத்திற்கு அருகில் ஆளில்லா வானூர்தியை இயக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. அதற்கான காரணங்களை நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடவில்லை.

ஸோங், ஜூலை 25ஆம் தேதி குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்றும் டியோவும் சோங்கும் ஆகஸ்ட் 21ஆம் தேதி அவ்வாறு செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

யி டிங் சோங்மீதான வழக்கு விசாரணை ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறும்.

குறிப்புச் சொற்கள்