தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கிச்சனர் சாலை கொலைச் சம்பவம்: காவல் அதிகாரியை வசைபாடியதாக நால்வர்மீது குற்றச்சாட்டு

2 mins read
d63b09eb-0638-4b7c-aed1-a659435326ad
நீதிமன்றத்தை வந்தடைந்த டீனோ மார்சியானோ அப்துல் வஹாப். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

காவல்துறை அதிகாரி ஒருவரை ஏளனம் செய்ததுடன் அவரை வசை பாடியதற்காகவும் செப்டம்பர் 25ஆம் தேதி நான்கு ஆடவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

டீனோ மார்சியானோ அப்துல் வஹாப், அலெக்ஸ் குமார் ஞானசேகரன், முகம்மது யூசோஃப் முகம்மது யஹ்யா, மோகனன் வி பாலகிருஷ்ணன் ஆகிய நால்வர் மீதும் பொது இடத்தில் தொந்தரவு விளைவித்தல், தொல்லை கொடுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இதையடுத்து, வழக்கறிஞர் சேவையை நாடப்போவதாக ஆடவர்கள் குறிப்பிட்டிருந்தனர். விசாரணை முடிவடைந்ததும் நால்வர் மீதும் கூடுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம்.

டீனோ, 44, அலெக்ஸ், 37, யூசோஃப், 32, மோகனன், 38 ஆகிய நால்வரும் செப்டம்பர் 22ஆம் தேதி கிச்சனர் சாலைக்கு அருகில் உள்ள சாம் லியோங் சாலையில் தடுப்பிடப்பட்ட பகுதி அருகே சென்றனர்.

ஏற்கெனவே அவ்விடத்தில் நடந்திருந்த ஒரு கொலை காரணமாக, காவல்துறையினர் சம்பவ இடத்தில் உள்ள ஆதாரங்களைப் பாதுகாக்க, அவ்வாறு தடுப்புகள் போட்டிருந்தனர்.

செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி அதிகாலை 5.10 மணி அளவில் தடுப்பைச் சுற்றி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறை அதிகாரிகளை நான்கு ஆடவர்கள் அணுகியதாகக் கூறப்படுகிறது.

தடுப்பைக் கடந்து செல்ல அவர்கள் முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டது.

வேறு பாதையில் செல்லுமாறு சார்ஜண்ட் வேய்ன் லிம் சீ கியட் நால்வருக்கும் அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, அதிகாரியை அந்த நால்வரும் வசை பாடியதாக் கூறப்படுகிறது.

இதை அந்த நால்வரில் ஒருவர் தமது கைப்பேசி மூலம் இரண்டு நிமிடக் காணொளி எடுத்ததாக அறியப்படுகிறது.

ஒரு கட்டத்தில், அதிகாரி ஓர் அரசாங்க ஊழியர் என்று சார்ஜண்ட் லிம்மை அலெக்ஸ் சுட்டிக்காட்டுவது தெரிகிறது.

காவல்துறையினர் பலமுறை அறிவுறுத்திய பிறகே, இறுதியில் அந்த நால்வரும் வேறு பாதையில் சென்றதாகக் காவல்துறை கூறியது.

விசாரணையின் மூலம் அந்த நால்வரும் அடையாளம் காணப்பட்டனர்.

அவர்கள் செப்டம்பர் 23ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டனர்.

அந்நால்வரும் மீண்டும் அக்டோபர் 8ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையாவர்.

அரசு ஊழியரை வசைபாடிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓராண்டுச் சிறை, $5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

பொது இடங்களில் தொல்லை விளைவித்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனை, $2,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்