தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நகருக்கு விரைந்து செல்ல சிராங்கூன், பொங்கோலுக்கு நான்கு புதிய பேருந்துகள்

2 mins read
3ac9bcd9-6198-4ad9-98ba-5f82a5bf245e
வார நாள்களின் உச்சநேரங்களில் காலையில் இருமுறையும் மாலையில் இருமுறையும் அந்த விரைவுப் பேருந்துச் சேவைகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. - கோப்புப் படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரின் வடகிழக்குப் பகுதிகளில் குடியிருப்போர் மத்திய வர்த்தக வட்டாரத்திற்கு விரைவாகச் செல்வதற்கு வசதியாக நான்கு புதிய பேருந்துச் சேவைகள் 2025 ஜனவரி 2 முதல் தொடங்கப்பட உள்ளன.

675, 676, 677, 678 ஆகிய எண்களைக் கொண்ட அந்த ‘சிட்டி டைரக்ட்’ பேருந்துச் சேவைகள் இயோ சூ காங், சிராங்கூன் மற்றும் பொங்கோல் குடியிருப்பாளர்கள் உச்சநேரத்தில் பயணம் செய்ய கைகொடுக்கும்.

வார நாள்களின் உச்சநேரங்களில் காலையில் இருமுறையும் மாலையில் இருமுறையும் அந்த விரைவுப் பேருந்துச் சேவைகள் செயல்படும் என்று அந்தப் பேருந்துகளை இயக்கும் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் திங்கட்கிழமை (டிசம்பர் 9) கூறியது.

சிடிஎஸ் 675 (CDS 675) பேருந்து புளோக் 953 இயோ சூ காங் ரோடு முன்னால் உள்ள நிறுத்தத்தில் இருந்து பயணத்தைத் தொடங்கும். ஹவ்காங் அவென்யூ 9, 4, 10 மற்றும் தெம்பனிஸ் ரோட்டில் உள்ள பேருந்து நிறுத்தங்களில் நின்று செல்லும்.

புளோக் 477ஏ அப்பர் சிராங்கூன் ரோடு முன்புள்ள நிறுத்தத்தில் இருந்து புறப்படும் சிடிஎஸ் 676 (CDS 676) பேருந்து, ஹவ்காங் அவென்யூ 7 மற்றும் அவென்யூ 5ல் உள்ள பேருந்து நிறுத்தங்களுக்குச் சேவையாற்றும்.

அதேபோல, புளோக் 110 பொங்கோல் ரோடு எதிரே உள்ள நிறுத்தத்தில் இருந்து பயணத்தைத் தொடங்கும் சிடிஎஸ் 677 (CDS 677) பேருந்து, செங்காங் ஈஸ்ட் வே, ஆங்கர்வேல் ரோடு, செங்காங் ஈஸ்ட் அவென்யூ, பொங்கோல் ரோடு மற்றும் புவாங்கோக் டிரைவ் வழியாகச் செல்லும்.

சிடிஎஸ் 678 (CDS 678) புளோக் 162பி பொங்கோல் சென்ட்ரல் பேருந்து நிறுத்தத்தில் பயணத்தைத் தொடங்கும்.

பின்னர், அந்த நான்கு விரைவுப் பேருந்துகளும் நகரை நோக்கி நேரடியாகச் செல்லும்.

நகருக்குள் நுழைந்ததும், ஆன்சன் ரோட்டில் உள்ள ஹப் சினர்ஜி பாய்ண்ட் (Hub Synergy Point) பேருந்து நிறுத்தத்தில் நிற்கும். அதன் பின்னர் நகருக்குள் அவற்றின் பயணம் முடிவடையும்.

குறிப்புச் சொற்கள்