வருமுன் காக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்து

டெங்கித் தடுப்புத் திட்டத்தில் 4 புதிய இடங்கள் இணைப்பு

2 mins read
4329f32d-cc07-4a07-be6d-93245a00a1d7
2026 இறுதிக்குள் கிட்டத்தட்ட 800,000 வீடுகளைச் சென்றுசேர ‘வொல்பாக்கியா’ திட்டம் முனையும் என்று தேசிய சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது.  - படம்: தேசிய சுற்றுப்புற வாரியம்

டெங்கிப் பரவலை முறியடிக்க முனையும் ‘வொல்பாக்கியா’ (Wolbachia) திட்டத்தின்கீழ் சிங்கப்பூரில் கூடுதலாக நான்கு இடங்கள் சேர்க்கப்படும் என்று சுற்றுப்புற, நீடித்த நிலைத்தன்மைக்கான மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி தெரிவித்துள்ளார். 

டாக்டர் ஜனில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 9 ) வெளியிட்ட அந்தப் பதிவில், பாலஸ்டியர் - வாம்போ, மோல்மென் - டோர்சட், கேலாங், பாசிர் ரிஸ் ஆகியவை இந்தத் திட்டத்தில் சேர்க்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆய்வுக்கூடத்தில் வளர்க்கப்படும் ‘வொல்பாக்கியா’ கொசுக்களின் வாயிலாக ஏடிஸ் கொசுப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது இந்தத் திட்டத்தின் நோக்கம். 

ஜனவரி 27ல் முதல் இரு இடங்களிலும் ஜனவரி 28ல் கேலாங்கிலும் மார்ச் முதல் பாசிர் ரிஸ்ஸிலும் இந்நடவடிக்கை தொடங்கும்.

2026 இறுதிக்குள் கிட்டத்தட்ட 800,000 வீடுகளைச் சென்றுசேர ‘வொல்பாக்கியா’ திட்டம் முனையும் என்று தேசிய சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது. 

இந்தத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட இடங்களிலுள்ள ஏடிஸ் கொசுக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 80, 90 விழுக்காடு குறைந்திருப்பதாகத் தேசிய சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது. அங்கு டெங்கி தொற்றுவதற்கான அபாயம் 70 விழுக்காட்டுக்கு மேல் குறைவதாகவும் தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்தது.

மேற்கூறப்பட்ட இடங்களுக்குப் பக்கத்திலுள்ள இடங்களில் வசிப்போர் இடையே கிருமித்தொற்று 45 விழுக்காடு குறைவாக உள்ளதாகவும் கூறப்பட்டது..

2025ல் புளோக் 22 சின் மின் ரோட்டிலும் ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 91, 92லும் டெங்கி பரவும் இரண்டு குழுமங்களில் ‘வொல்பாக்கியா’ கொசுக்கள் பொதுவெளியில் விடப்பட்டன. இந்தக் குழுமங்கள் பின்னர் மூடப்பட்டன.

திட்டத்தின்படி, ஆய்வுக்கூடத்தில் வளர்க்கப்படும் ஆண் கொசுக்கள், ‘வொல்பாக்கியா’ என்ற கிருமியைச் சுமந்தநிலையில் டெங்கி அபாயமுள்ள பகுதிகளில் விடப்படுகின்றன. 

இந்த வகை ஆண் கொசுக்கள் கடிப்பதில்லை. அந்தக் கொசுக்கள், பெண் கொசுக்களுடன் இணையும்போது பெண் கொசுக்கள் இடும் முட்டைகள் குஞ்சு பொரிக்காது. இதனால் கொசுக்களின் எண்ணிக்கை குறைகிறது.

தேசிய சுற்றுப்புற அமைப்பும் டிபக் அமைப்பும் நிர்வகிக்கும் இரண்டு தனி இடங்களில் ‘வொல்பாக்கியா ஏடிஸ்’ கொசுக்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 

குறிப்புச் சொற்கள்