கோலாலம்பூர்: மலேசியாவின் கெந்திங் மலைக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) விபத்து நிகழ்ந்தது.
அதில் நான்கு சிங்கப்பூர் சுற்றுப்பயணிகள் காயமடைந்தனர்.
அவர்கள் பயணம் செய்துகொண்டிருந்த கார் மீது ‘பிக்அப்’ வாகனம் ஒன்று மோதியது. விபத்துக்குப் பிறகு அந்த ‘பிக்அப்’ வாகனம் நில்லாமல் அங்கிருந்து தப்பிச் சென்றது.
இந்நிலையில், ‘பிக்அப்’ வாகனத்தின் ஓட்டுநரை மலேசியக் காவல்துறை கைது செய்துள்ளது. அவர் மலேசியர் அல்லர் என்று தெரிவிக்கப்பட்டது.
‘பிக்அப்’ வாகனத்தில் மூன்று பயணிகள் பயணம் செய்துகொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த நான்கு சிங்கப்பூரர்களும் தனியார் வாடகை காரில் பயணம் செய்துகொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரர்கள் பயணம் செய்த கார் மிக மோசமாகச் சேதமடைந்தது. காயமடைந்த சிங்கப்பூர் சுற்றுப்பயணிகளில் குறைந்தது இருவருக்கு உடனடியாக மருத்துவ உதவி தேவைப்பட்டது. வாடகை கார் ஓட்டுநர் காயமின்றி தப்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.