சிங்கப்பூரில் உள்ள ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் வியாழக்கிழமை (செப்டம்பர் 17) முதல் செப்டம்பர் 27 வரை வாடிக்கையாளர்களுக்குச் சிறப்புச் சலுகை ஒன்று வழங்கப்படுகிறது.
ஃபேர்பிரைஸ், ஃபேர்பிரைஸ் ஃபைனஸ்ட், ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா, யூனிட்டி ஆகிய கடைகளில் ஒரே ரசீதில் நிகரத் தொகையாக $50 செலவிடும் வாடிக்கையாளர்களுக்கு $4 ஃபேர்பிரைஸ் பற்றுச்சீட்டு வழங்கப்படும் என ஃபேர்பிரைஸ் குழுமம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக நான்கு பற்றுச்சீட்டுகள் வரை பெற முடியும். இவ்வாறு வழங்கப்படும் பற்றுச்சீட்டுகளைக் குறைந்தபட்சச் செலவு வரம்பு ஏதுமின்றி பயன்படுத்த முடியும். விநியோகிக்கப்பட்ட அடுத்த நாளில் இருந்து அக்டோபர் மாதம் 14ஆம் தேதி வரை அனைத்து ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளிலும் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
2026ஆம் ஆண்டில் ஃபேர்பிரைஸ் குழுமம் வழங்கும் ஐந்தாவது சுற்றுப் பற்றுச்சீட்டு சலுகை இது. வாடிக்கையாளர்கள் தங்களது அன்றாடத் தேவைகளுக்கான செலவுகளைக் குறைக்க உதவும் குழுமத்தின் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக இது அமைகிறது.
பொதுமக்களுக்கு உதவும் வகையில் 2026ஆம் ஆண்டில் ஃபேர்பிரைஸ் குழுமம் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளது. இவற்றில் குறைந்த வருமானம் பெறும் சிங்கப்பூரர்களுக்கான ‘சாஸ்’ நீல நிற, ஆரஞ்சு நிற அட்டை வைத்திருப்பவர்களுக்கான தள்ளுபடி உயர்வு முக்கியமானது.
இத்திட்டத்தின்கீழ், செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி முதல் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதி வரை குறைந்த வருமானப் பிரிவினர் தங்களது மளிகைப் பொருள்களை வாங்கும்போது முன்பிருந்த 3 விழுக்காட்டுக்குப் பதிலாக 6 விழுக்காட்டுத் தள்ளுபடியைப் பெறலாம்.
சாஸ் நீல நிற அட்டை வைத்திருப்பவர்களுக்கு வியாழக்கிழமைகளிலும் சாஸ் ஆரஞ்சு நிற அட்டை வைத்திருப்பவர்களுக்கு வெள்ளிக்கிழமைகளிலும் இத்தள்ளுபடி பொருந்தும்.
