மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவருக்கு $12,000 அபராதத்துடன் 4 வாரச் சிறை

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவருக்கு $12,000 அபராதத்துடன் 4 வாரச் சிறை

படங்கள்: கெல்வின் செங், நீதிமன்ற ஆவணங்கள்

22 May 2026 - 5:56 pm

1 mins read

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி, சாலை விதிமுறைகளை மீண்டும் மீண்டும் மீறிய ஆடவருக்கு நான்கு வாரச் சிறைத்தண்டனையுடன் $12,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் சாலையோரம் பதிக்கப்பட்ட கல்மீது மோதியதற்காக அவருக்கு வெள்ளிக்கிழமை (மே 22) நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்டது.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டை 42 வயது ஆடம் ஹ‌ஷிம் ஒப்புக்கொண்டார். அத்துடன் கவனமின்றி வாகனத்தைச் செலுத்திய குற்றச்சாட்டையும் அவர் ஏற்றுக்கொண்டார். விடுவிக்கப்படும் நாளிலிருந்து 60 மாதங்களுக்கு வாகனம் ஓட்ட அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2008, 2010ஆம் ஆண்டுகளில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது, தடைசெய்யப்பட்ட காலத்தில் வாகனம் செலுத்தியது, போதிய கவனமின்றி வாகனம் ஓட்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை அவர் புரிந்துள்ளார்.

சென்ற ஆண்டு (2025) ஜூலை 9ஆம் தேதி இரவு, ஆடம், அவரின் துறையைச் சேர்ந்தோருடன் ‌சைம்சில் மது அருந்தினார். நள்ளிரவுக்குப் பிறகு குடிப்பதை அவர் நிறுத்தினார். பின்னர் ஜூலை 10ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் சைம்சிலிருந்து உட்லண்ட்சில் உள்ள அவரின் அலுவலகத்திற்குப் போனார். அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் சென்றபோது ஆடம் கட்டுப்பாட்டை இழந்தார். கார், சாலையோரம் பதிக்கப்பட்ட கல்மீது மோதியது.

அங்குச் சென்ற போக்குவரத்துக் காவல்துறை அதிகாரி, ஆடம் குடிபோதையில் இருப்பதைக் கண்டார். விபத்துக் குறித்து அதிகாரிக்கு எப்படித் தகவல் கிடைத்தது என்பது தெரியவில்லை.

சுவாசப் பரிசோதனையில், அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி அவர் மது அருந்தியது தெரியவந்தது.

குறிப்புச் சொற்கள்