அண்டைவீட்டுப் பெண்ணுக்கு அடி, கணவருக்குக் கொலை மிரட்டல்; பெண்ணுக்குச் சிறை

2 mins read
2b7f19f0-73a1-4673-94b7-93fe6aef2ba5
சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஜெசிந்தா டான் சுவாட் லின், 50. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்டை வீட்டாரைத் தாக்கியது, தமது சொந்தக் கணவரைக் கொல்லப்போவதாக மிரட்டியது ஆகிய குற்றங்களுக்காக 50 வயதுப் பெண் ஒருவருக்கு நான்கு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

ஜெசிந்தா டான் சுவாட் லின் என்னும் இந்தப் பெண் $4,600 அபராதம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இல்லத்தரசியான அந்தப் பெண், ‘டுடே’ உள்ளிட்ட செய்தி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.

2024 பிப்ரவரி 16ஆம் தேதி வெஸ்ட் கோஸ்ட் ரோட்டில் உள்ள தமது வெஸ்ட்மோன்ட் கொண்டோமினிய வீட்டுக்கு அவர் திரும்பியபோது, பொது நீச்சல்குளம் அருகே அண்டை வீட்டுப் பெண் ஒருவர் உடற்பயிற்சி செய்வதைக் கண்டார்.

தமது மகனின் ஓய்வுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் உடற்பயிற்சியை நிறுத்துமாறு அந்தப் பெண்ணிடம் ஜெசிந்தா கூறினார். ஆனால், அவர் நிறுத்தவில்லை.

அதனால் ஆத்திரமடைந்த ஜெசிந்தா, இரவு 9.50 மணியளவில் தமது வீட்டு சன்னல் வழியாக ஆறு முட்டைகளை அந்தப் பெண்மீது வீசினார்.

பத்து நிமிடம் கழித்து தரை துடைக்கும் குச்சியால் அந்தப் பெண்ணைத் தாக்கினார்.

அதன் அலுமினிய கைப்பிடி மூன்றாக உடையும் வரை அந்தப் பெண்ணின் தலையிலும் கையிலும் அவர் தாக்கியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து குப்பைகளையும் ஊதுவத்தித் தொட்டியையும் வீசினார். அவை அந்தப் பெண் மீது படவில்லை.

காவல்துறையில் அளிக்கப்பட்ட புகாருக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட ஜெசிந்தாவை அவரது கணவர் பிணையில் எடுத்தார்.

இரண்டு மாதங்கள் கழித்து, கணவரோடு அந்தப் பெண் வாக்குவாதம் செய்தார். அப்போது கணவர் தூங்கும்போது அவரைக் கொல்ல இருப்பதாக கணவரின் காதில் விழும் வகையில் தமது மகனிடம் கூறினார்.

பின்னர் ஒருநாள், கணவரிடம் சென்ற அந்தப் பெண் தம்மை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் காவல்துறையில் புகார் அளிக்கப்போவதாக மிரட்டினார்.

அந்த மிரட்டல்களைத் தொடர்ந்து ஜெசிந்தாவின் கணவர் காவல்துறையில் புகார் அளித்தார்.

தம் மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை ஜனவரி 2ஆம் தேதி ஜெசிந்தா ஒப்புக்கொண்டார். இதர இரு குற்றச்சாட்டுகள் தண்டனை விதிக்கும்போது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

குறிப்புச் சொற்கள்