சிட்னி நகருக்கு 40 கிலோகிராம் போதைப்பொருள் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் மீது ஆஸ்திரேலியாவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியக் கூட்டரசுக் காவல்துறையும் ஆஸ்திரேலிய எல்லைப் படையும் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) வெளியிட்ட ஓர் அறிக்கையில், அந்த 55 வயது ஆடவர் தமது பயணப்பெட்டியில் 32 கிலோ மெத்தம்பெட்டமைன், 8 கிலோ கொக்கேன் போதைப்பொருள்களை ஒளித்து வைத்திருந்தது கண்டறியப்பட்டதாகத் தெரிவித்தன.
மலேசியாவிலிருந்து புறப்பட்டு கடந்த வியாழக்கிழமை (பிப்ரவரி 20) விமானத்தில் சிட்னி சென்று இறங்கிய அந்த ஆடவரை ஆஸ்திரேலிய எல்லைப் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். தாம் எந்தவொரு பயணப்பெட்டியுடனும் பயணம் செய்யவில்லை என அவர் கூறினார். அவரிடம் சோதனை நடத்தி முடித்தவுடன், சிட்னி விமான நிலையத்திலிருந்து அந்த ஆடவர் வெளியேறினார்.
பின்னர், பயணப்பெட்டிகளைக் கொண்டுசெல்லும் பட்டையில் இரு பயணப்பெட்டிகள் கேட்பாரற்று இருந்ததை அதிகாரிகள் கண்டறிந்தனர். அவற்றில் ஏறக்குறைய 32 கிலோ மெத்தம்பெட்டமைன், 8 கிலோ கொக்கேன் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விவகாரம் பற்றி ஆஸ்திரேலியக் கூட்டரசுக் காவல்துறைக்குத் தெரியப்படுத்தப்பட்டவுடன், அப்பயணப்பெட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றினர். அந்த சிங்கப்பூர் ஆடவரைத் தேடும் பணியை அவர்கள் தொடங்கினர்.
அந்த ஆடவர் அடிலெய்ட் நகருக்குச் சென்றது தெரியவந்த பிறகு, அடிலெய்ட் விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) அவரை ஆஸ்திரேலியக் கூட்டரசுக் காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அங்கிருந்து விமானத்தில் புறப்பட்டு மலேசியா செல்ல அந்த ஆடவர் முற்பட்டார்.
அடிலெய்ட் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (பிப்ரவரி 24) முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், பின்னர் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சிட்னி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அவர் முன்னிலையாகவிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளின் சந்தை மதிப்பு ஏறக்குறைய A$29.6 மில்லியன் (S$25.1 மி.) எனவும் கொக்கேன் போதைப்பொருளின் மதிப்பு A$2.6 மில்லியன் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.