80க்கு மேற்பட்ட முதுநிலைப் பாடத்திட்டங்களுக்கு 40% தள்ளுபடி: என்யுஎஸ்

2 mins read
44eee887-7066-4169-a904-70adbc7a4049
2024 ஆகஸ்ட் முதல் அனைத்து சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் இச்சலுகையைப் பெறலாம் என்று என்யுஎஸ் தலைவர் டான் எங் சியே ஜூலை 26ஆம் தேதி தெரிவித்தார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் (என்யுஎஸ்) இந்த ஆகஸ்ட் மாதம் முதல் 80க்கு மேற்பட்ட முதுநிலைப் பட்டத்துக்கான பாடத்திட்டங்களுக்கு 40 விழுக்காட்டுக் கட்டணத் தள்ளுபடியை அறிவித்துள்ளது.

சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் இது பொருந்தும் என்று பல்கலைக்கழகத்தின் தலைவர் டான் எங் சாய் ஜூலை 26ஆம் தேதி தெரிவித்தார்.

அரசாங்க மானியம் பெறாத பாடத்திட்டங்களுக்கு மட்டுமே இந்தக் கட்டணத் தள்ளுபடி பொருந்தும்.

கணினித்துறை, நிதித் துறை, உயிர்மருத்துவத் துறை போன்றவற்றில் முதுநிலைப் பட்டம் பெறுவதற்கான பாடத் திட்டங்கள் இவற்றில் அடங்கும்.

பல் மருத்துவம், சட்டம், பொதுச் சுகாதாரம் போன்ற பாடத்திட்டங்களுக்கும் ஆய்வு தொடர்பான பாடத்திட்டங்களுக்கும் இது பொருந்தாது.

‘என்யுஎஸ் வாழ்நாள் கற்றல் விழா’வில் பேராசிரியர் டான் உரையாற்றினார். இந்த ஆண்டு நிகழ்ச்சி வேலையிடத்தில் செயற்கை நுண்ணறிவு எனும் கருப்பொருளில் கவனம் செலுத்தியது.

நிகழ்ச்சியில் நேரடியாக ஏறக்குறைய 250 பேர் கலந்துகொண்டனர். கிட்டத்தட்ட 1,000 பேர் இணையம் வழி இணைந்தனர்.

2023ஆம் ஆண்டில் பல்கலைக்கழகம் நடத்திய கருத்தாய்வில், மேற்படிப்பு, பயிற்சி ஆகியவற்றில் சேர்வதற்கு அவற்றுக்கான கட்டணம் முக்கியத் தடைக்கல்லாக இருப்பது தெரியவந்ததாகப் பேராசிரியர் டான் கூறினார்.

என்யுஎஸ்சின் முன்னாள் மாணவர்கள் சுமார் 2,300 பேரிடம் அந்தக் கருத்தாய்வு நடத்தப்பட்டது. அவர்களில் 60 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் கடந்த ஈராண்டுகளில் ஏதாவதொரு கல்வித் திட்டத்தில் பங்குகொண்டனர். கிட்டத்தட்ட 90 விழுக்காட்டினர் அடுத்த 12 மாதங்களில் கல்வியைத் தொடரத் திட்டமிடுவதாகக் கூறினர்.

இருப்பினும், வேலை, குடும்பக் கடப்பாடுகள், கட்டணம் ஆகியவை கல்வியைத் தொடர்வதற்குத் தடைக்கற்கள் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

பல்கலைக்கழகம் தள்ளுபடி அறிவித்திருக்கும் பாடத்திட்டங்களுக்கு மொத்தம் $40,000 முதல் $66,000 வரை கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

தற்போது தள்ளுபடி வழங்கப்படுவதால், கல்வியைத் தொடரவும் புதிய திறன்களைக் கற்றுக்கொண்டு வேலைப் பயணத்தில் தங்களை மேம்படுத்திக்கொள்ளவும் ஆர்வமுள்ளவர்களுக்கு இது வாய்ப்பாக அமையும் என்று நம்புவதாகப் பேராசிரியர் டான் கூறினார்.

இதற்கு முன்னர் 70க்கு மேற்பட்ட முதுநிலைப் பாடத்திட்டங்களுக்கு என்யுஎஸ் 20 விழுக்காட்டுக் கட்டணத் தள்ளுபடி வழங்கியது.

குறிப்புச் சொற்கள்