சிங்கப்பூருடன் தொடர்புடைய ஏறக்குறைய எண்பது பேர் அனைத்துலக காவல்துறையான இன்டர்போலின் சிவப்பு எச்சரிக்கைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் ஏறக்குறைய 40 பேர் சிங்கப்பூரர்கள்.
ஜனவரி 7ஆம் தேதி நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் உள்துறை அமைச்சர் கா. சண்முகம் இந்த விவரங்களை வெளியிட்டார்.
மொத்தம் 80 பேரில் பாதிப் பேர் சிங்கப்பூரில் இல்லை என்று அவர் கூறினார்.
திருவாட்டி சில்வியா லிம் (அல்ஜுனியட் குழுத் தொகுதி), திரு லூயிஸ் சுவா (செங்காங் குழுத் தொகுதி) திருவாட்டி ஹி டிங் ரு (செங்காங் குழுத் தொகுதி) ஆகிய உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு திரு சண்முகம் பதிலளித்தார்.
சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு என்பது நாடு கடத்தப்படுதல், சரணடைதல் அல்லது அதுபோன்ற சட்ட நடவடிக்கை நிலுவையில் உள்ள ஒருவரைக் கண்டறிந்து, தற்காலிகமாகக் கைது செய்ய உலகெங்கிலும் உள்ள சட்ட அமலாக்கத்திற்கான கோரிக்கையாகும்.
இது, கைது ஆணை அல்ல. ஆனால் ஓர் உறுப்பு நாட்டின் வேண்டுகோளின் பேரில் வெளியிடப்பட்டு தேடப்படும் நபருக்கான உலகளாவிய எச்சரிக்கை.
சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று, தானாகவே சம்பந்தப்பட்ட நபரைக் கைது செய்வதற்கான அதிகாரத்தை காவல்துறைக்கு வழங்கிவிடாது. திருப்பியனுப்பும் ஒப்பந்தத்தின்கீழ் திருப்பியனுப்ப கோரிக்கை விடுத்தால் மட்டுமே காவல்துறை அதைச் செயல்படுத்த முடியும் என்றார் அவர்.
“இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள நாடு எங்களுடன் தொடர்பு கொண்டால் எங்களுடைய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்களுடைய சட்ட வரம்பிற்குள் அந்நாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்குவர்,” என்று திரு சண்முகம் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
தற்போது, சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்ட ஐந்து சிங்கப்பூரர்களின் அடையாளங்கள் இண்டர்போல் இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ளன.
சுமார் $18.7 மில்லியன் மோசடி செய்துள்ளதாகக் கூறப்படும் சியாக் லாய் சுன், 2007ஆம் ஆண்டின் கொலைக் குற்றத்திற்காகத் தேடப்படும் முஹமட் ரிட்ஸுவான், 2006ஆம் ஆண்டு கொலை குற்றத்திற்காகத் தேடப்படும் முஹமட் ஃபாய்தில் மாவி, 2008ஆம் ஆண்டு ஆயுதக் கொள்ளை, கடத்தல் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் முன்னாள் டாக்சி ஓட்டுநர் நி சூன் ஜூ, 2016ஆம் ஆண்டு ஓ-நிலைத் தேர்வில் ஏமாற்றுவதற்கு பல மாணவர்களுக்கு உதவிய முன்னாள் துணைப்பாட நிலைய முதல்வர் போனி போ யூவான் நீ ஆகியோர் அந்த ஐவர்.