அங் மோ கியோவில் லாரி பாரந்தூக்கி கவிழ்ந்தது; கட்டுமான ஊழியர் மருத்துவமனையில்

அங் மோ கியோவில் லாரி பாரந்தூக்கி கவிழ்ந்தது; கட்டுமான ஊழியர் மருத்துவமனையில்

1 mins read
5fe4fa5f-6349-445a-8184-8f05405d2f94
ஊழியர் மீது கான்கிரீட் பக்கெட் விழுந்ததில் அவரது கணுக்காலில் எலும்பு முறிவும் கையில் வெட்டுக்காயமும் ஏற்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

லாரி பாரந்தூக்கி கவிழ்ந்து விழுந்த விபத்தில், பங்ளாதேஷைச் சேர்ந்த 40 வயது கட்டுமான ஊழியர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங் மோ கியோவில் உள்ள பெல்கிரேவியா டிரைவில் புதன்கிழமை (மே 29) மாலை 6 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது. கான்கிரீட் பக்கெட்டைத் தூக்கிக்கொண்டிருந்தபோது லாரி பாரந்தூக்கி அதன் பக்கவாட்டில் சாய்ந்து விழுந்ததாக மனிதவள அமைச்சு தெரிவித்தது.

அந்த கான்கிரீட் பக்கெட் அந்த ஊழியர் மீது விழுந்ததில் அவரது கணுக்காலில் எலும்பு முறிவும் கையில் வெட்டுக்காயமும் ஏற்பட்டது.

கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர், தற்போது சீரான உடல்நிலையுடன் இருப்பதாக அமைச்சு கூறியது.

பெல்கிரேவியா ஏஸ் எனும் திட்டத்துக்காக கட்டுமானத் தளத்தில் அந்த ஊழியர் பணிபுரிந்தார். ஃபேர்வியூ டிவெலப்மண்ட்ஸ் எனும் நிறுவனம் அத்திட்டத்தின் மேம்பாட்டாளராக உள்ளது. கிம்லி கன்ஸ்ட்ரக்‌ஷன் எனும் நிறுவனம் அந்தக் கட்டுமானத் தளத்தில் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் அமைச்சு, அந்தக் கட்டுமானத் தளத்தில் லாரி பாரந்தூக்கிகளின் செயல்பாடு சம்பந்தப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்