கவனக்குறைவாக கார் ஓட்டிக் காயம் விளைவித்த மூதாட்டிக்கு $4,000 அபராதம்

கவனக்குறைவாக கார் ஓட்டிக் காயம் விளைவித்த மூதாட்டிக்கு $4,000 அபராதம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

28 Feb 2026 - 4:41 pm

2 mins read

காரை வலப்புறம் திருப்ப அனுமதி இல்லாத இடத்தில் அவ்வாறு செய்து விபத்தும் மற்றொருவருக்குக் காயமும் விளைவித்த மூதாட்டிக்கு $4,000 அபராதம் விதிக்கப்பட்டது.

2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ஆம் தேதியன்று இரவு உணவிற்குப் பிறகு தம் நண்பரை வீட்டிற்கு அழைத்துச் சென்றபோது ரூத் சியா சோ கிம், நிக்கல் நெடுஞ்சாலையிலிருந்து பிராஸ் பாசா சாலைக்குள் போக்குவரத்து விதிமுறைக்கு உட்படாமல் தமது காரை வலப்புறம் திருப்பினார்.

அப்போது, மற்றொரு கார்மீது மோதியதில், அதில் பயணம் செய்த குமாரி கிரீமௌன்வாய் ரவிவன் எனும் 41 வயதுப் பெண் காயமடைந்தார்.

தற்போது 85 வயதாகும் சியா, போதிய கவனம் மற்றும் எச்சரிக்கையின்றி வாகனம் ஓட்டி, பலத்த காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து, வெள்ளிக்கிழமையன்று (பிப்ரவரி 27) அவருக்கு $4,000 அபராதம் விதிக்கப்பட்டது.

நீதிமன்ற ஆவணங்களின்படி, சியா தமது நண்பரான 90 வயது திரு லிம் லூ லியோங்குடன் தஞ்சோங் ரூவில் உள்ள சிங்கப்பூர் நீச்சல் மன்றத்திலிருந்து புறப்பட்டார்.

அவர் திரு லிம்மை வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக தியோங் பாரு நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அந்தப் பாதை அவருக்குப் பரிச்சயம் இல்லாததால், வழிகாட்டுதலுக்குத் தமது நண்பரையே அவர் நம்பியிருந்தார்.

இரவு 9.20 மணியளவில், சியா நிக்கல் நெடுஞ்சாலை மற்றும் பிராஸ் பாசா சந்திப்பை நெருங்கியபோது, போக்குவரத்து சமிக்ஞை விளக்கு சிவப்பாக மாறியதால் தமது காரை நிறுத்தினார்.

சமிக்ஞை விளக்கு பச்சையாக மாறியதும் அவர் காரை முன்னோக்கிச் செலுத்தி, ஒருவழிப் பாதையான பிராஸ் பாசா சாலையை நோக்கி வலதுபுறம் திருப்பினார்.

சியாவின் காரில் இருந்த கேமராவில் பதிவான விபத்துக் காட்சி, நீதிமன்றத்தில் திரையிடப்பட்டது. காரைத் திருப்புவதற்கு முன்னதாக, அவர் திரு லிம்மிடம், “இங்கே திருப்பலாமா? நீங்கள் சொல்வது உறுதிதானா?” என்று கேட்பது அதில் பதிவாகியிருந்தது.

அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த கார் மீது மோதிய வேகத்தில் சியாவின் கார் சுழன்று, நடைபாதை மேல் ஏறியது. அங்கு நின்று கொண்டிருந்த சில பாதசாரிகள் மீதும் கார் மோதியது.

விபத்து காரணமாக குமாரி கிரீமௌன்வாய் ரவிவனுக்கு விலா எலும்பு முறிவு மற்றும் இடது கை, வலது முழங்கால்களில் சிராய்ப்புகள் ஏற்பட்டன. அவருக்கு 33 நாள்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது.

விபத்திற்குப் பிறகு, சியா கார் ஓட்டுவதை நிறுத்திவிட்டதாகவும் தமது காரை விற்றுவிட்டதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
விபத்துகாயம்அபராதம்