எதிர்வரும் உலக நீர்விளையாட்டு மற்றும் உலக நீர்விளையாட்டு மாஸ்டர்ஸ் வெற்றியாளர் போட்டிகளிலிருந்து ஈட்டப்படும் பயணத்துறை வருவாய் S$60 மில்லியனை எட்டும் என முன்னுரைக்கப்படுகிறது. சிங்கப்பூரில் ஒருமாத காலம் நடைபெறும் இந்த நிகழ்வில் பங்கேற்க வெளிநாடுகளிலிருந்து 40,000 பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அல்ஜுனிட் குழுத்தொகுதி எம்.பி. ஜெரால்ட் கியாமின் கேள்விகளுக்குப் பதிலளித்த கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா, வியாழக்கிழமை (பிப்ரவரி 27) நாடாளுமன்றத்தில் இந்த விவரங்களை வழங்கினார்.
இந்த 40,000 எண்ணிக்கையில் பார்வையாளர்கள், விளையாட்டு வீரர்கள், அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் அடங்குவர் என திரு சுவா சொன்னார்.
ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 3 வரை நடைபெறும் உலக நீர்விளையாட்டுப் போட்டிகளில் நீச்சல், நீர்ப் பந்தாட்டம், ஒருங்கிசைந்த நீச்சல், திறந்தவெளி நீச்சல், முக்குளிப்பு உள்ளிட்ட ஆறுவகை விளையாட்டுகள் இடம்பெறுகின்றன.
உக்ரேனில் ரஷ்யாவின் படையெடுப்பு காரணமாக, ரஷ்யாவின் கஸான் நகரிலிருந்து இடம்பெயர்வு செய்யப்பட்ட இப்போட்டிகளை ஏற்று நடத்த சிங்கப்பூர் தேர்வுசெய்யப்பட்டது.
ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இப்போட்டிக்கான தற்காலிக இடவசதிகளை அமைப்பதற்கும் பின்னர் அவற்றைப் பிரித்தெடுப்பதற்கும் ஏற்படும் செலவு குறித்து திரு கியாம் கேட்டார்.
இவற்றுக்கான கட்டுமானச் செலவு இன்னமும் இறுதிப்படுத்தப்பட்டு வருவதாகக் கூறிய திரு சுவா, இப்போட்டிகளை ஏற்று நடத்துவதில் தற்காலிக வசதிகளை அமைக்க மற்ற நகரங்களுக்கு ஏற்பட்ட செலவோடு இது ‘ஒப்பிடும்படியாக’ இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகச் சொன்னார்.
காலாங்கில் இடவசதிகளை அமைப்பதற்கான பணிகளை மே இறுதியில் நிறைவுசெய்ய ஏற்பாட்டாளர்கள் இலக்கு கொண்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
லீஷர் பார்க் காலாங் கடைத்தொகுதிக்குப் பக்கத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் கட்டப்பட்டுவரும் இந்தத் தற்காலிக இடவசதியில் நீச்சல் குளங்கள், 4,800 பேர் அமர்வதற்கான இருக்கைகள், சமூக நிகழ்ச்சிகளுக்கான இடங்கள் உள்ளிட்டவை இடம்பெறும்.