அடுத்த ஐந்து ஆண்டுகளில் புதிதாக ஏறத்தாழ 40,000 பிள்ளைப் பராமரிப்பு இடங்கள் உருவாக்கப்படவுள்ளன. இவற்றில் 6,000 புதிய கைக்குழந்தைப் பராமரிப்பு இடங்களும் உள்ளடங்கும்.
மரினா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் சனிக்கிழமை (நவம்பர் 2) நடைபெற்ற ஆரம்பகாலக் குழந்தைப்பருவ கொண்டாட்டத்தின்போது சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி இதனை அறிவித்தார்.
அரசாங்க ஆதரவு, இடைக்கால அடிப்படையில் 80 விழுக்காடு வரையிலான மழலையர், பாலர் பள்ளிகளுக்கு நீட்டிக்கப்படும் என்பது இதன்மூலம் உறுதிசெய்யப்படுவதாகத் திரு மசகோஸ் தெரிவித்தார். தற்போது அது 65 விழுக்காடாக உள்ளது.
மழலையர், பாலர் பள்ளிக்கான கட்டணக் கழிவு விண்ணப்பத்தை மேலும் சுமுகமாக்க, பெற்றோர்கள் ஆரம்பகால பாலர்பருவ மேம்பாட்டு அமைப்பிடம் பெற்றோர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்று திரு மசகோஸ் கூறினார். தற்போது கட்டணக் கழிவிற்காக பாலர் பள்ளி மூலம், ‘ஃலைப்எஸ்ஜி’ (LifeSG) செயலி வழியாகப் பெற்றோர்கள் விண்ணப்பிக்கின்றனர்.
புதிய முறை டிசம்பர் 9ஆம் தேதிமுதல் கட்டங்கட்டமாகச் செயல்படுத்தப்படும்.
முதன்மை நடத்துநர்களும் பங்காளி நடத்துநர்களும் நடத்தும் (anchor and partner operators) முழு நேர பாலர் பள்ளிகளுக்கான மாதாந்தர கட்டண வரம்புகள், ஜனவரி 1 முதல் 40 வெள்ளி குறைக்கப்பட்டு முறையே 640 வெள்ளியாகவும் 680 வெள்ளியாகவும் இருக்கும்.
டிசம்பர் முதல், 6,000 வெள்ளிக்குக் குறைவான மொத்த மாத வருமானம் உள்ள குடும்பங்கள், தங்கள் வருமானப் பிரிவுக்கான அதிகபட்ச குழந்தைப் பராமரிப்பு கட்டணக் கழிவுகளுக்குத் தகுதிபெறும்.
மூன்று வெள்ளி முதல் 115 வெள்ளி வரையிலான, அல்லது தங்கள் வருமானத்தில் 2 விழுக்காடு வரையிலுமான கட்டணத்தைப் பெற்றோர்கள், 2025 முதல் கூடுதல் கழிவுகளுடன் செலுத்தலாம். இதன்மூலம் கூடுதலாக 17,000 குழந்தைகள் பயன்பெறுவர் எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
தரமான திட்டங்களை உருவாக்கி வழங்குவதற்காக மழலையர், பாலர் பள்ளிகளுக்குக் கூடுதல் தன்னாட்சியையும் உரிமையையும் வழங்குவதற்கு, ‘ஸ்பார்க் 2.0’ எனப்படும் புதிய சிங்கப்பூர் பாலர் பள்ளித் தரச்சான்றுத் திட்டம் 2025 ஜனவரி முதல் செயல்படுத்தப்படும்.
பிள்ளைகளின் தேவைக்கு ஏற்ப மழலையர், பாலர் பள்ளிகள் தங்கள் திட்டங்களை வடிவமைத்து, தங்களது தனித்துவமான திறன்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க இம்மாற்றம் முனைகிறது.
மழலையர், பாலர் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவதற்கு ‘ஸ்பார்க்’ திட்டம் 2011ல் உருவாக்கப்பட்டது. தொடங்கப்பட்ட காலகட்டத்தில் அத்திட்டத்தின்கீழ் தரச்சான்று பெற்ற 100 பள்ளிகளுடன் ஒப்புநோக்க, தற்போதுள்ள பள்ளிகளில் 60 விழுக்காடு (கிட்டத்தட்ட 1,000 பள்ளிகள்) தரச்சான்றைப் பெற்றுள்ளன.
இதற்கிடையே, 2004ல் தொடங்கப்பட்ட நெறிமுறைக் கோட்பாடுகள், தற்போது ஆரம்பகால பாலர்பருவக் கல்வியாளர்கள் சங்கத்தினரால் திருத்தப்பட்டுள்ளன.
கல்வியாளர்களுக்கான வழிகாட்டுதல் காலத்திற்கு ஏற்ப மாற்றம் பெறுவதை இது உறுதிசெய்கிறது.
இந்தக் கோட்பாடுகளை கல்வியாளர்கள் நடைமுறைப்படுத்துவதற்கு, ஐந்து படிநிலைகள் கொண்ட நெறிசார்ந்து முடிவெடுக்கும் முறையும் சான்றுக் கதைகளும் உள்ளடக்கப்படும்.
அத்துடன், வளர்ச்சி சார்ந்த தேவையுள்ள பிள்ளைகளுக்கு தொடக்கத்திலேயே உதவி வழங்கும் நிபுணர்களை உள்ளடக்கும் விதமாக இந்தத் திருத்தப்பட்ட கோட்பாடு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.