துவாஸ் சோதனைச்சாவடியில் கார் ஒன்றில் காணப்பட்ட $400,000க்கும் அதிகமான சட்டவிரோதப் பணம், வாகன ஓட்டுநர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசுடைமையாக்கப்பட்டது.
காவல்துறை, செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 28) வெளியிட்ட அறிக்கையில், அந்தப் பணத்தை அரசுடைமையாக்குவது தொடர்பில் அரசாங்க வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவிற்கு நீதிமன்றம் ஏப்ரல் 16ஆம் தேதி அனுமதி வழங்கியதாகத் தெரிவித்தது.
மலேசியாவைச் சேர்ந்த 57 வயது டியோங் கின் இங் எனும் ஆடவர், குற்றச்செயல்கள் மூலம் கிடைத்த பணத்தை வைத்திருந்தது, நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட ரொக்கம் குறித்துத் துல்லியமாக அதிகாரிகளிடம் அறிவிக்காதது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் தொடர்பில் குற்றவாளி என மார்ச் 26ஆம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. அதே நாளில் அவருக்குப் பத்து மாதங்கள், 3 நாள்களுக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகக் காவல்துறை குறிப்பிட்டது.
டியோங்கின் காரின் பின்பகுதியில் மொத்தம் 398,775 சிங்கப்பூர் டாலரும் 1,621 மலேசிய ரிங்கிட்டும் இருந்ததாகக் கூறப்பட்டது. 2025ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி அவர் தனது காரில் துவாஸ் சோதனைச்சாவடி வழியாகச் சிங்கப்பூருக்கு வர முயன்றபோது பிடிபட்டார்.

