சிங்கப்பூர் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) நடத்திய அமலாக்க நடவடிக்கையில் எல்லை கடந்த மோசடிகளில் ஈடுபடும் குற்றக் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
அந்தக் குற்றக் கும்பல் 40 மில்லியன் வெள்ளிக்கு மேலாக மோசடி செய்ததாக நம்பப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள்மீது வியாழக்கிழமை (செப்டம்பர் 11) குற்றஞ்சாட்டப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களில் 9 பேர் சிங்கப்பூரர்கள். அவர்களில் 8 பேர் ஆண்கள், ஒருவர் பெண். மேலும் இரண்டு மலேசிய ஆடவர்களும் ஒரு பிலிப்பீன்ஸ் குடிமகளும் கைது செய்யப்பட்டனர். குடியிருப்புப் பகுதிகள், ஹோட்டல்கள் உள்ளிட்ட தீவின் பல இடங்களில் அவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் சிலர் கம்போடியாவில் குற்றக் கும்பல்களுக்கு உதவியதாகக் கூறப்படுகிறது. அவர்கள் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் 330க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் அண்மையில் சிங்கப்பூருக்கு வந்ததாகவும் அவர்கள் தெரிந்தே குற்றச் செயலில் ஈடுபட்டு பணம் சம்பாதித்ததாகவும் காவல்துறையின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், கம்போடியாவில் குற்றக் கும்பலுக்குத் தொடர்புடைய இடத்தில் கம்போடிய அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மோசடி செயலுக்குப் பயன்படுத்தப்படும் பல மின்கருவிகள் கைப்பற்றப்பட்டன.
சிங்கப்பூர் அதிகாரிகளும் கம்போடிய அதிகாரிகளும் நடத்திய இந்தக் கூட்டு அமலாக்க நடவடிக்கையில் 2.5 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான நிதி கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த நிதி, வங்கி மற்றும் மின்னிலக்க நாணயங்களுக்கான கட்டமைப்புகளில் இருந்தன.
தொடர்புடைய செய்திகள்
குற்றக் கும்பல் கம்போடியத் தலைநகர் நோம்பென்னில் இருந்தவாறு சிங்கப்பூர் வாசிகளை மோசடி செய்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிங்கப்பூர் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலை அடுத்து கம்போடியாவுடன் இணைந்து குற்றக் கும்பலைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் இறங்கினர்.