பூகிசில் வியாழக்கிழமை (ஜூன் 19) காலை கார் மோதிய விபத்தில் 41 வயது சைக்கிளோட்டி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வியாழக்கிழமை முதலில் செய்தி வெளியிட்டிருந்தது. அந்த சைக்கிளோட்டி அடுத்த நாள் இறந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
காலாங் சாலையை நோக்கிச் செல்லும் விக்டோரியா ஸ்திரீட்டில் மலபார் பள்ளிவாசல் எதிரே நிகழ்ந்த இந்த விபத்து குறித்து அன்றைய தினம் காலை 6.30 மணிக்கு தனக்கு தகவல் கிடைத்ததாகக் காவல்துறை கூறியது.
எஸ்ஜி ரோடு விஜிலாண்ட் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளி, விபத்தைக் காண்பித்தது. சாலைச் சந்திப்பின் ஒருபுறம் சைக்கிளோட்டி செல்வதைக் காண முடிந்தது. சிவப்பு போக்குவரத்து விளக்கிற்கு எதிராக அவர் செல்வதுபோல தெரிந்தது.
சாலைச் சந்திப்பின் நடுப்பகுதியை அவர் கடந்தபோது, அவ்வழியாகச் சென்ற ஒரு கார் அந்த சைக்கிள்மீது மோதியது. இதில் அந்த சைக்கிளோட்டி தூக்கி வீசப்பட்டார்.
அவர் சுயநினைவற்ற நிலையில் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் அங்கு உயிரிழந்ததாகக் காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
இந்த விபத்து தொடர்பில் அந்த காரை ஓட்டிய 44 வயது ஆடவர் காவல்துறை விசாரணைக்கு உதவி வருகிறார்.