வாடகை வருமானத்தை முறையாகக் கணக்குக் காட்டாத 422 வீட்டு உரிமையாளர்கள் சிக்கினர்

வாடகை வருமானத்தை முறையாகக் கணக்குக் காட்டாத 422 வீட்டு உரிமையாளர்கள் சிக்கினர்

2 mins read
46b16c30-f6bf-4677-955c-c985ac3874dc
அண்மையில் அதிகரிக்கப்பட்ட சொத்து வரியைச் செலுத்துவதாலேயே, வாடகை வருமானத்தைக் கணக்குக் காட்டத் தேவையில்லை என்று இவர்கள் தவறாக நினைத்ததால்தான், இந்த உரிமையாளர்களில் சிலர் தங்களின் வாடகை வருமானத்தைத் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வாடகை வருமானத்தை முறையாகக் கணக்கு காட்டாததால் பிடிபட்ட வீட்டு உரிமையாளர்களின் எண்ணிக்கை 50 விழுக்காடு அதிகரித்துள்ளது. இது சொத்து முதலீட்டாளர்கள் பலர் இன்னும் சொத்துகளை வாடகைக்கு விடுவதற்கான செலவுகள் குறித்து அறியாமல் இருப்பதற்கான ஓர் அறிகுறியாகும்.

2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நடந்த அதன் அண்மைய வரித் தணிக்கையில் சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம், 793 சொத்து உரிமையாளர்களின் வருமான வரிச் சமர்ப்பிப்புகளில் வாடகை வருமான அறிக்கையில் முரண்பாடுகள் இருப்பதாகக் கண்டறியப்பட்ட பிறகு, அவர்களிடம் விசாரணை நடத்தியது.

முடிவில், 422 வீட்டு உரிமையாளர்கள் வாடகையைக் குறைவாகக் காட்டுவது அல்லது தொடர்பில்லாத செலவுகளைக் கோருவது, மற்றும் வாடகை வருமானத்தையே முழுமையாகக் காட்டாமல் இருப்பது போன்ற மிகவும் தீவிரமான விதிமீறல்கள் உள்ளிட்ட பல்வேறு தவறுகளைச் செய்திருப்பது கண்டறியப்பட்டது.

பிடிபட்ட வீட்டு உரிமையாளர்களின் எண்ணிக்கை, 2023ஆம் ஆண்டில் அபராதம் விதிக்கப்பட்ட ஏறத்தாழ 280 வீட்டு உரிமையாளர்களைவிட கிட்டத்தட்ட 50 விழுக்காடு அதிகமாகும்.

அண்மையில் அதிகரிக்கப்பட்ட சொத்து வரியைச் செலுத்துவதாலேயே, வாடகை வருமானத்தைக் கணக்குக் காட்டத் தேவையில்லை என்று இவர்கள் தவறாக நினைத்ததால்தான், இந்த உரிமையாளர்களில் சிலர் தங்களின் வாடகை வருமானத்தைத் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த அண்மைய தணிக்கையின் விளைவாக, கூடுதல் வரிகள் மற்றும் அபராதங்களாக $4.8 மில்லியனை ஆணையம் மீட்டெடுத்தது.

இந்தத் தொகையானது 2023ஆம் ஆண்டில் தெரிவிக்கப்பட்ட முந்தைய தணிக்கை நடவடிக்கையில் மீட்கப்பட்ட $1.3 மில்லியனைப்போல் கிட்டத்தட்ட நான்கு மடங்காகும்.

மூன்று ஆண்டுகளை உள்ளடக்கிய முந்தைய தணிக்கையின்போது, ஆணையம் கிட்டத்தட்ட 450 வீட்டு உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி, இறுதியில் அவர்களில் கிட்டத்தட்ட மூவரில் இருவர்மீது தகுந்த நடவடிக்கை எடுத்தது

குறிப்புச் சொற்கள்