அரசாங்கத்தின் மின்னிலக்கச் சேவைகளையும் பயனர் அனுபவங்களையும் மேம்படுத்தப் பங்களித்தோரை ஊக்குவிக்கும் விதமாக ‘மின்னிலக்கச் சேவைகள் விருது’ வழங்கி சிறப்பிக்கப்பட்டது. அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பு (GovTech) தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக நடத்தி வரும் இந்நிகழ்வில் பல்வேறு அடிப்படையின் கீழ் 44 விருதுகள் வழங்கப்பட்டன.
நவம்பர் 28 தேதியன்று வாழ்நாள் கற்றல் நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு, சுகாதார அமைச்சுகளின் மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட சில சிறந்த சேவைகளைக் குறிப்பிட்டுப் பேசிய அமைச்சர் “எளிதான தடையற்ற சேவைகளுடன் அரசாங்க அமைப்புகளை முழுமையாக மின்னிலக்கமயமாக்கும் ‘அறிவார்ந்த தேசம்’ பயணம் 2014ல் தொடங்கியது.
“பத்தாண்டுகளில் ஏறத்தாழ 99 விழுக்காடு சேவைகளை இணையவழியில் அடைந்திடும் அளவு சிங்கப்பூர் வளர்ச்சி கண்டுள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.
சிறந்த அணுகல் தன்மை, பரிவர்த்தனைகளுக்கான வாடிக்கையாளர் சேவை, எளிய பயன்பாடு, சிறந்த தகவல் அளிக்கும் தளம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் தனிநபர்கள், பொது, தனியார் நிறுவனங்கள் விருது பெற்றன.
ஏறத்தாழ நான்கு மில்லியன் பயனர்களைக் கொண்ட மத்திய சேமநிதிக் கழக இணையத்தளம் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் தகவல் அளிப்பதிலும், செயல்பாட்டுத் திறனிலும், நிதி தொடர்பான வளங்கள் அளிப்பதிலும் மேம்பாடு அடைந்ததற்காக ‘சிறந்த பயன்பாட்டு அனுபவத்திற்கான’ (Best Usability (Government) Award Winner) விருதை வென்றுள்ளது.
மத்திய சேமநிதிக் கழக மின்னிலக்கப் பயன்பாடுகளின் மூத்த ஆலோசகர் தர்ஷினி ஜம்பூர் மோகன்சுவாமி குழுவினர் 4E எனப்படும் எளிதான, பயனுள்ள, அணுக்கமான, புரிதலை (Easy, Effective, Empathetic, and Empowering) ஏற்படுத்தும் வகையில் தளத்தை மேம்படுத்தியுள்ளனர்.
“இந்த விருது எங்கள் தளத்தை மேம்படுத்தி உயர்தர மின்னிலக்கச் சேவைத் தரத்தை அடைய ஊக்குவிக்கிறது,” என்று குழுவினர் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டு புதிதாகத் தொடங்கப்பட்ட திறன்பேசி வழி எளிதில் அணுகக்கூடிய அரசாங்கத் தளத்திற்கான (Most Mobile Optimised Website) விருதையும், சிறந்த பயனர் மைய தளத்திற்கான (Most UserCentric Website) விருதையும் ‘கல்வி அமைச்சின் கார்ப்பரேட்’ (MOE Corporate Website) இணையத்தளம் வென்றது.
வெளியுறவு அமைச்சு, போக்குவரத்து அமைச்சு, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம், சிங்கப்பூர் உள்நாட்டு வருவாய் ஆணையம் உள்ளிட்ட பல அரசாங்கத்தின் இணையத் தளங்கள் விருது வென்றன.
அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பின் நிர்வாக இயக்குநரும் மின்னிலக்க (Product designer) தயாரிப்பு வடிவமைப்பாளருமான லிங்கேஸ்வரன் பழனிச்சாமி, “முழு அரசாங்க பயன்பாட்டுப் பகுப்பாய்வுத் தளத்தின் (Whole-of-Government Application Analytics) மூலம் பொது நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களைச் சேகரித்து அதன் அடிப்படையில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இது அந்தந்த அமைப்புகளின் மின்னிலக்கச் சேவைகளை மேம்படுத்த ஊக்குவிக்கும்,” என்று சொன்னார்.
தவிர, ஒவ்வொரு இணையத்தளமும் பயனர்களின் பரிந்துரைக்கேற்ப மேம்படுத்தப்படுகிறது. அதற்கான குழு ஆலோசனைகளிலும் கருத்துரைப்பு அமர்வுகளிலும் சிறப்பாகப் பங்களித்த பொதுமக்கள் எட்டு பேருக்கு ‘சிறந்த குடிமக்கள் பங்களிப்பாளர்கள் விருது’ (Outstanding Citizen Contributors Award Winners) வழங்கப்பட்டுள்ளது.
“சேவைகளை மேம்படுத்த பயனர்களின் கருத்துகள் அவசியம். அவர்களின் ஈடுபாட்டை இவ்விருது ஊக்குவிக்கும்,” என்றும் சொன்னார் லிங்கேஸ்வரன்.

