தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீட்டை ஊக்குவிக்க $440 மில்லியன் கூடுதல் நிதி

2 mins read
புதிதாகத் தொடங்கப்படும் ‘டீப்-டெக்’ நிறுவனங்களுக்குப் பொருந்தும்
2e984974-83c6-42d6-a612-6f4408b35656
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

‘டீப்-டெக்’ எனப்படும் அதிநவீன தொழில்நுட்பம் சார்ந்து சிங்கப்பூரில் புதிதாகத் தொடங்கப்படும் நிறுவனங்களில் தனியார் துறை முதலீட்டை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு அரசாங்கம் கூடுதலாக 440 மில்லியன் வெள்ளியை அளிக்கவிருக்கிறது.

துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் அக்டோபர் 28ஆம் தேதி இதை அறிவித்தார்.

‘ஸ்டார்ட்அப் எஸ்ஜி ஈக்விடி’ திட்டம் 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அது, 28 பில்லியன் வெள்ளி மதிப்புமிக்க ஆய்வு, புத்தாக்க, நிறுவனத் திட்டத்தின் (RIE 2025) ஓர் அங்கமாகும்.

ஆண்டு அடிப்படையில் புதிய நிறுவனங்களுக்கான மூலதன நிதி சற்றே சரிந்துள்ள நிலையில் துணைப் பிரதமரின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உலகளாவிய நிலையில் மூலதன நிதியளிப்பு ஏறக்குறைய 15 விழுக்காடாக இருக்கும் வேளையில் இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே என்று திரு ஹெங் கூறினார்.

புதிய அதிநவீன தொழில்நுட்ப நிறுவனங்களில் தனியார் துறை முதலீட்டை ஊக்குவிக்கும் நோக்கில் அரசாங்கமும் முதலீடு செய்ய இந்த நிதி உதவும்.

‘டீப்-டெக்’ என்பது கடினமானதும் அதேநேரத்தில் அதிகம் செலவாகக்கூடியதும் என்று குறிப்பிட்ட திரு ஹெங், இந்தத் துறையில் புத்தாக்கமிக்கவர்களுக்கு உதவ, வலுவான கட்டமைப்பு தேவை என்றார்.

தொடக்க கட்டத்தில் இத்தகைய நிறுவனங்களுக்கு மேம்பட்ட ஆதரவு வழங்குவதற்கு நிதியாதரவு விரிவுபடுத்தப்படும் என்று துணைப் பிரதமர் கூறினார்.

2024ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் புத்தாக்க, தொழில்நுட்ப வாரத்தின் (Switch) தொடக்க நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

புதிதாகத் தொடங்கப்படும் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் அரசாங்கப் பங்கு முதலீட்டுக்கான உச்ச வரம்பு, மொத்தம் 8 மில்லியன் வெள்ளியிலிருந்து 12 மில்லியன் வெள்ளியாக உயர்த்தப்படும் என்று துணைப் பிரதமர் ஹெங் கூறினார்.

‘ஸ்டார்ட்அப் எஸ்ஜி ஈக்விடி’ திட்டத்தை என்டர்பிரைஸ் எஸ்ஜியும் பொருளியல் வளர்ச்சிக் கழகமும் கூட்டாக நிர்வகிக்கும். இதன் மூலம் அரசாங்கம் தனியார் துறை முதலீட்டாளர்களுடன் இணைந்து புதிதாகத் தொடங்கப்படும் புத்தாக்கமிக்க அதிநவீன தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்யும்.

குறிப்புச் சொற்கள்