வரும் மாதங்களில் கிட்டத்தட்ட 45 ஊழியர்களை சிங்போஸ்ட் நிறுவனம் பணிநீக்கம் செய்யவுள்ளது.
இது ஒரு சீரமைப்பு நடவடிக்கை என அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
மேலும், அதன் வர்த்தகப் பிரிவுகள் பெருநிறுவனச் செயல்பாடுகளை அதிகளவு கையாள்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் இது ஒரு பகுதி என அதில் சிங்போஸ்ட் குறிப்பிட்டது.
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு ஆளானவர்களில் பெரும்பாலானோர் நிறுவனத்தின் ஆதரவு பிரிவுகளில் பணிபுரிபவர்கள் எனச் சிங்போஸ்ட் நிறுவனப் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
ஆட்குறைப்புக்கு ஆளானவர்களில் அனைத்துலக வர்த்தகப் பிரிவைச் சேர்ந்த சிலரும் உள்ளனர் என்றார் அவர்.
மேலும், கடுமையான போட்டி உட்பட, நிறுவனம் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் பொருளியல் சவால்களின் விளைவாக இச்சீரமைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒரே செயல்பாடுகளைக் கொண்ட பணிகளை நீக்குவதன் மூலம் வர்த்தகப் பிரிவின் இயக்கத் திறனை வலுப்படுத்துவதும் நிறுவனத்தின் விரைந்து செயல்படும் திறனை மேம்படுத்துவதும் இந்த நடவடிக்கையின் நோக்கம் என்றார் அவர்.
ஆட்குறைப்பு செய்ய வேண்டும் என நிறுவனம் எடுத்த முடிவு எளிதானதன்று எனக் கூறிய அவர், பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஏற்ற மாற்று வேலையை நிறுவனத்திற்குள் வழங்குவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் சிங்போஸ்ட் எடுத்ததாக அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, கடந்த ஆண்டு டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் சிங்போஸ்ட் குழுமத்தின் லாபம் 23.8 விழுக்காடு குறைந்து 21.1 மில்லியன் வெள்ளியாக உள்ளது.
சிங்போஸ்ட் நிறுவனத்தின் சிங்கப்பூர், அனைத்துலக வர்த்தகப் பிரிவுகளின் நடைமுறைச் செலவுகள், வருவாய் வளர்ச்சியை விட அதிகமாக இருந்ததால் நிறுவனத்தின் லாபம் குறைந்ததாகக் கூறப்பட்டது.
அதிக பணவீக்கம், விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட இடையூறு, கடுமையான போட்டி உள்ளிட்ட தொடர்ச்சியான பொருளியல் அழுத்தங்களால் மூன்றாம் காலாண்டு லாபத்தில் சரிவு ஏற்பட்டதாக சிங்போஸ்ட் பிப்ரவரி 20ஆம் தேதி (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.