உலகளாவிய முதலீட்டாளர் திட்டத்தில் பங்கேற்ற 450 பேருக்கு நிரந்தரவாசம் வழங்கப்பட்டது

உலகளாவிய முதலீட்டாளர் திட்டத்தில் பங்கேற்ற 450 பேருக்கு நிரந்தரவாசம் வழங்கப்பட்டது

1 mins read
a0e141ae-ad9e-48d9-acec-9c010aa0e87d
உலகளாவிய முதலீட்டாளர் திட்டத்தின்கீழ் 2015 - 2025 காலகட்டத்தில் ஏறத்தாழ 450 பேருக்கு நிரந்தரவாசம் வழங்கப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உலகளாவிய முதலீட்டாளர் திட்டத்தின்கீழ் (ஜிஐபி) கடந்த 2015 - 2025 காலகட்டத்தில் ஏறத்தாழ 450 பேருக்கு நிரந்தரவாசம் வழங்கியுள்ளதாக வெளியுறவு, வர்த்தக தொழில் அமைச்சுகளுக்கான துணை அமைச்சர் கான் சியாவ் ஹூவாங் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 

பாட்டாளிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்  பஃட்லி ஃபாஸி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார் திருவாட்டி கான்.

அப்போது அதே காலகட்டத்தில், ‘ஜிஐபி’ திட்டம் சிங்கப்பூரை தளமாகக் கொண்ட புதிய மற்றும் ஏற்கெனவே இயங்கி வந்த வணிகங்களில் ஏறத்தாழ $500 மில்லியன் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்துள்ளது என்றார் அவர்.

“இந்த முதலீடுகளில் பாதிக்கும் மேற்பட்டவை தொழில்முறை சேவைகள், தகவல் தொடர்பு, நிதிச் சேவை துணைத் துறைகளில் இடம்பிடித்தன,” என்றும் குறிப்பிட்டார் திருவாட்டி கான்.

முதலீட்டாளர்களின் சார்பாக சிங்கப்பூரைச் சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யும் ‘ஜிஐபி‘ நிதிகளில் மேலும் $430 மில்லியன் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் துணை அமைச்சர்  குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் பொருளியல் வளர்ச்சிக் கழகத்தால் 2004ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட உலகளாவிய முதலீட்டாளர் திட்டம் தகுதிவாய்ந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர் மற்றும் வணிக உரிமையாளர்களுக்கு நிரந்தரவாசத்தை வழங்கும் திட்டமாகும். 

இத்திட்டம் மூலம் குடியுரிமை பெற்றவர்கள் இங்கு தங்கியிருக்கும் காலத்தில், அரசாங்கம் நிர்ணயித்துள்ள பொருளியல் குடியிருப்பு சார்ந்த கடப்பாடுகளைத் தொடர்ந்து நிறைவேற்றுவதை உறுதிசெய்ய, பொருளியல் வளர்ச்சிக் கழகம்  அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதாக மேலும் குறிப்பிட்டார் திருவாட்டி கான்.

குறிப்புச் சொற்கள்