தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூத்தோருக்கான விளையாட்டுகளில் 4,500 பேர் பங்கெடுப்பு

2 mins read
70bb7ba1-611e-4e32-8365-845bb8a8f9ac
துடிப்புடன் இருக்கவும் விளையாட்டுகளில் பங்கெடுக்கவும் நட்புறவுகளை ஏற்படுத்திக்கொள்ளவும் மூத்தோரை ஊக்குவிப்பது நிகழ்ச்சியின் குறிக்கோள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் மூத்தோருக்காக முதன்முறையாகத் தேசிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டுகளில் 4,500 பேர் பங்கெடுத்துள்ளனர். அனைவரையும் உள்ளடக்கிய அந்தப் போட்டிகளின் தகுதிச் சுற்றுகள் வட்டார அளவில் கடந்த மாதம் (செப்டம்பர் 2025) 8 முதல் 12ஆம் தேதி வரை நடைபெற்றன. அவற்றின் இறுதிச் சுற்றுகள் சனிக்கிழமை (அக்டோபர் 4) ‘நமது தெம்பனிஸ்’ நடுவத்தில் நடைபெற்றன.

மூத்தோருக்கான விளையாட்டுகளைக் கொண்ட நிகழ்ச்சிக்கு ‘ஸ்போர்ட் சிங்கப்பூர்’ அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. துடிப்புடன் இருக்கவும் விளையாட்டுகளில் பங்கெடுக்கவும் நட்புறவுகளை ஏற்படுத்திக்கொள்ளவும் மூத்தோரை ஊக்குவிப்பது நிகழ்ச்சியின் குறிக்கோள்.

விளையாட்டுகளில் பங்கெடுப்பதற்கு முதியோர் சிலர் தயங்கக்கூடும். வயதாகிவிட்ட காரணத்தால் துடிப்பான நடவடிக்கைகளில் ஈடுபட அவர்களுக்கு அச்சம் இருக்கக்கூடும். அத்தகையோரின் தயக்கத்தையும் அச்சத்தையும் போக்கி, விளையாட்டுகளில் பங்குபெறுவதை எளிதாக்குவதும் நிகழ்ச்சியின் நோக்கம்.

பல வகையான விளையாட்டுகளில் கலந்துகொண்டு போட்டியிட்டதில் முதியோருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. எடுத்துக்காட்டாக ஒரு விளையாட்டில், குவளைகளைக் குறிப்பிட்ட விதத்தில் வேகத்துடனும் விவேகத்துடனும் அடுக்கவேண்டும். பின்னர் அவற்றைப் பிரித்தெடுக்கவேண்டும். அதில் பங்கெடுத்தது, ஒரு வேலையைச் செய்யும்போது சிந்தனையைச் சிதறவிடாமல் கவனமாகக் கையாளும் ஆற்றலை வளர்த்துக்கொள்ள உதவியதாகத் திருவாட்டி அடெலின் சோங் என்பவர் கூறினார். 68 வயதான அவர், தமது தாயார் நினைவிழப்புப் பிரச்சினையால் பல ஆண்டுகளாக அவதியுற்றுக் காலமானதால் தமக்கும் அது வந்துவிடுமோ என்று கவலைப்பட்டதாகச் சொன்னார்.

குவளைகளை அடுக்கும் விளையாட்டில் ஆரம்பத்தில் தடுமாறினாலும் பின்னர் அதனைக் கற்றுக்கொண்ட அவர் இப்போது உற்சாகத்துடன் விளையாடுகிறார். திருவாட்டி சோங்கிற்கு விளையாட்டின்போது முன்னாள் மென்பொருள் பொறியாளர் இங் ஜூ லெங் நண்பரானார்.

முதுமை காரணமாகத் தமது ஆற்றல் குறித்து நம்பிக்கை இழந்ததாகக் குறிப்பிட்டார் 64 வயது இங். முன்னர் முடியவே முடியாது என்று நினைத்த விளையாட்டில் இப்போது வாராவாரம் கலந்துகொள்ள விரும்புவதாக அவர் சொன்னார். திருவாட்டி சோங், திரு இங் இருவரும் இறுதிப்போட்டியில் பங்கெடுக்கின்றனர்.

குவளைகளை அடுக்குவதோடு மேலும் நான்கு விளையாட்டுகளிலும் முதியோர் கலந்துகொண்டனர்.

முதியோருக்கான தேசியக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தேசிய விளையாட்டுகளின் இறுதிப் போட்டிகள் இடம்பெற்றன. அந்த வருடாந்தரக் கொண்டாட்டம், துடிப்புடனும் ஆரோக்கியத்துடனும் அர்த்தத்துடனும் முதுமையடைவதை ஊக்குவிக்கிறது.

கொண்டாட்ட நிகழ்ச்சிகள் அக்டோபர் 4 முதல் 10 வரை நடைபெறும். துணைப் பிரதமர் கான் கிம் யோங் கொண்டாட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

பலவீனமாக இருக்கும் முதியோருக்கென்று சில நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சில உணவுவகைகளை எப்படிச் சமைப்பது என்பதையும் அவர்கள் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம். மின்விளையாட்டுகளில் பங்கேற்கும் அனுபவத்தையும் முதியோர் பெறலாம். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் ஏறக்குறைய 3,000 பேர் கலந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்