நவீன வீட்டு உபயோகப் பொருள் நிறுவனமான நிரியோசின் விநியோகக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்குச் சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் உதவி வருகிறது.
இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை அந்நிறுவனத்திற்கு எதிராக 47 புகார்கள் பதிவாகியுள்ளதாகச் செய்தி நிறுவனமான ‘சிஎன்ஏ’விடம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 24) சங்கம் தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் அந்நிறுவனத்திடமிருந்து நீர்ச் சுத்திகரிப்புக் கருவிகள், தண்ணீர் விநியோகக் கருவிகள், துணி உலர்த்தும் சட்டங்கள் போன்ற வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கியிருந்தனர்.
இருப்பினும், ஒப்புக்கொள்ளப்பட்ட தேதிகளில் விநியோகமும் அதனைப் பொருத்தும் பணியும் செய்யப்படவில்லை என்றும் அந்நிறுவனம் சந்திப்பு நேரங்களைத் தொடர்ந்து ஒத்திவைத்து வாடிக்கையாளர்களை ஏமாற்றியது என்றும் புகார்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விற்பனையை ரத்து செய்து, செலுத்திய பணத்தைத் திரும்பப்பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருவதாகச் சங்கம் கூறியது.
கூகல் மதிப்பாய்வில் அந்நிறுவனத்திற்கு எதிராகப் பல வாடிக்கையாளர்கள் ஆகக் குறைவான மதிப்பெண் மட்டுமே வழங்கி, பணம் செலுத்தப்பட்ட பொருள்கள் விநியோகிக்கப்படவில்லை என அண்மை வாரங்களில் முறையிட்டுள்ளனர்.
வீட்டு உபயோகப் பொருள்களை வாங்குவதற்கு முன், பயனீட்டாளர்கள் சந்தை நிலவரங்களை ஆராய்ந்து, நிறுவனத்தின் நம்பகத்தன்மையையும் மதிப்பாய்வுகளையும் சரிபார்க்க வேண்டும் எனச் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
“பொருள்களை வாங்குவதற்கு முன் முழுத் தொகையையும் முன்பணமாகச் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும். உறுதிசெய்யும் நேரத்தில் சிறிய தொகையை முன்பணமாகச் செலுத்தி, பொருள்கள் விநியோகிக்கப்பட்டு, பொருத்தப்பட்ட பின்னரே பாக்கித் தொகையைச் செலுத்த வேண்டும்,” எனச் சங்கம் ஆலோசனை வழங்கியது.


