தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஷங்ரிலா கலந்துரையாடலில் 47 நாடுகள் பங்கேற்பு

2 mins read
0c8a42c7-f6b1-4e19-9158-27783b01ba3f
ஆசிய பசிஃபிக் வட்டாரத்தில் முக்கியமான பாதுகாப்புச் சவால்களை விவாதிப்பதற்கு இந்தப் பன்னாட்டுக் கலந்துரையாடல் நடத்தப்படுகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அனைத்துலக நாடுகளுக்கான பெரும் ஒன்றுகூடல் நிகழ்வான ஷங்ரிலா கலந்துரையாடல் இன்று ஷங்ரிலா ஹோட்டலில் தொடங்கியுள்ளது. 

22ஆவது முறையாக நடைபெறவுள்ள இந்தக் கலந்துரையாடலின் தொடக்க நாளில் பிரஞ்சு அதிபர் இமானுவெல் மக்ரோன் சிறப்புரை ஆற்றவிருக்கிறார்.

வருடாந்தர பாதுகாப்பு கருத்தரங்கில் அவர் சிறப்புரை ஆற்றும் முதல் ஐரோப்பிய தலைவராக இருக்கிறார்.

சிங்கப்பூருக்கும் பிரான்சுக்கும் இடையே நல்லுறவு நிலவி 60 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் திரு மக்ரோனின் உரை இடம்பெறுகிறது.

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் சனிக்கிழமை (மே 31) பிற்பகலின்போது உரையாற்றவிருக்கிறார்.

லண்டனின் உத்திபூர்வ கல்விக்கான அனைத்துலக ஆய்வு நிலையத்தில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறுகிறது. 

ஆசிய பசிஃபிக் வட்டாரத்தில் முக்கிய பாதுகாப்புச் சவால்கள் குறித்து இங்கு பேசப்படும்.

இம்முறை 47  நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இது, கடந்த ஆண்டின் எண்ணிக்கையான 45ஐக் காட்டிலும் அதிகம்.

2002ல் தொடங்கிய இந்த வருடாந்தர கலந்துரையாடல், தற்காப்பு மற்றும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மதிப்புமிக்க, வெளிப்படையான, எந்தச் சார்புகளும் அற்ற தளத்தை வழங்கியுள்ளதாக சிங்கப்பூரின் தற்காப்பு அமைப்பு, மே 29ஆம் தேதி மாலையன்று தெரிவித்தது.

சீனாவையும் அமெரிக்காவையும் சேர்ந்த உயரிய தற்காப்புத் துறை அரசு பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வது வழக்கம்.

இரண்டு தரப்புகளுக்கும் இடையேயான வேற்றுமைகளை குறைப்பதற்கான தளமாகவும் இது உள்ளது.

கடந்த ஆண்டில் நடைபெற்ற கலந்துரையாடலில் அமெரிக்காவின் தற்காப்புச் செயலாளர் லாய்ட் ஆஸ்டின், சீனாவின் தற்காப்பு அமைச்சர் டோங் ஜூனைச் சந்தித்தார். ஆனால் இந்த இரு நாடுகளுக்கும் இடையே இத்தகைய இருநாட்டு அமைச்சர்நிலை பேச்சுவார்த்தை இவ்வாண்டு நடைபெறாது.

அட்மிரல் டோங்கிற்குப் பதிலாக அவருக்குக் கீழ்நிலையிலுள்ள தற்காப்புப் பல்கலைக்கழக பிரதிநிதிக்குழு ஒன்றை அனுப்புவதாக சீனா, கலந்துரையாடல் நடைபெறும் ஒரு நாளுக்கு முன்பு குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்