பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டிகளைச் சட்டவிரோதமாக ஒளிபரப்பும் 47 திருட்டு இணையத்தளங்களுக்குத் தடை கோரப்பட்டிருப்பதால் இணையவாசிகள் பலரும் அவற்றை இனி பயன்படுத்த இயலாது.
சிங்கப்பூரில் உள்ள இணையச் சேவை வழங்கும் நிறுவனங்கள் அத்தகைய சட்டவிரோதத் தளங்களைத் தடை செய்வதற்கான உயர் நீதிமன்ற உத்தரவை பிரிட்டிஷ் தொழில்முறைக் காற்பந்துக் கழகம் பெற்றுவிட்டது.
அந்தத் தடை உத்தரவு ஜனவரி 15ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சிங்கப்பூரில் உள்ள இணையச் சேவை வழங்கும் நிறுவனங்களான எம்1, சிங்டெல், ஸ்டார்ஹப், வியூகுவெஸ்ட் ஆகியவற்றுக்கு பிப்ரவரி 5ஆம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டது.
Epicsports.online உள்ளிட்ட சட்டவிரோத இணையமுகவரிகளையும் RojaDirecta போன்ற பிரபல இணையத்தளங்களின் கிளைத் தளங்களையும் அந்நிறுவனங்கள் அந்தக் கெடுவுக்குள் தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உத்தரவு.
கெடுவுக்கு முந்தைய நாளான பிப்ரவரி 4ஆம் தேதி வரை சட்டவிரோதத் தளங்களில் கிட்டத்தட்ட பாதியளவை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளால் பார்க்க முடிந்தது.
உத்தரவின்படி RojaDirecta இணையத்தளத்தின் இருவேறு கிளைத்தளங்கள் தடுக்கப்படும்.
ஸ்பானியக் காற்பந்துப் போட்டியான லா லிகாவைச் சட்டவிரோதமாக ஒளிபரப்பியதற்காக கடந்த 2024ஆம் ஆண்டு அந்த இணையத்தளத்திடம் €31.6 மில்லியன் (S$47.5 மில்லியன்) இழப்பீடு கேட்டு ஐரோப்பிய ஊடகப் பெருநிறுவனமான மீடியாபுரோ வழக்குத் தொடுத்திருந்தது.
தொடர்புடைய செய்திகள்
ஐரோப்பிய நாடுகளில் ஆண்டுதோறும் நடைபெறும் இங்கிலீஷ் பிரிமியர் லீக் போன்ற காற்பந்துப் போட்டிகளை நேரலையில் காண சிங்கப்பூர் உள்பட ஆசியாவில் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர்.
அவரவர் நாடுகளில் உள்ள அதிகாரபூர்வ ஒளிபரப்பாளர்களிடம் சந்தா செலுத்தியே அந்தப் போட்டிகளை ரசிக்கமுடியும். ஆயினும், காற்பந்துப் போட்டிகளை சில திருட்டுத் தளங்கள் சட்டவிரோதமாக ஒளிபரப்பி வந்தன.
கடந்த 2020ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின்படி, சிங்கப்பூரில் ஏறத்தாழ 800 இணைய முகவரிகளை பிரிமிரியர் லீக் அமைப்பு தடை செய்திருந்தது. ஆசிய பசிபிக் நாடுகளில் 30,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத இணையத்தளங்களையும் அது தடுத்து நிறுத்தியது.

