பாசிர் ரிஸ் பூங்கா கரையோரத்தில் சனிக்கிழமை (மார்ச் 22) 47 வயது ஆடவரின் உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்தச் சம்பவத்தில் சூது எதுவும் இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்படவில்லை எனக் காவல்துறை கூறியது.
அன்றைய தினம் காலை 8.30 மணிக்கு உதவி கோரி காவல்துறைக்கு அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, அந்த ஆடவரின் உடல் மீட்கப்பட்டது. அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவ உதவியாளர் ஒருவர் அறிவித்தார்.
திருவாட்டி இங் எனும் வழிப்போக்கர் ஒருவர், பாசிர் ரிஸ் பூங்காவில் தாம் நடைபயிற்சி மேற்கொண்டபோது, கரையோரத்தில் உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது குறித்து மெதுவோட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் தமக்குத் தெரியப்படுத்தியதாகக் கூறினார்.
“அந்த உடலைப் பார்த்தபோது, நான் மிகவும் அதிர்ச்சியுற்றேன். அவரின் உயிர் இப்படி முடிவுக்கு வரவேண்டிதாயிற்றே என நான் மிகவும் வருந்துகிறேன்,” என்றார் திருவாட்டி இங், 29.
சம்பவ இடத்தில் மூன்று காவல்துறை கார்களையும் கடலோரக் காவல்படையின் சுற்றுக்காவல் படகு ஒன்றையும் தாம் பார்த்ததாக அவர் கூறினார்.
‘ரெட்டிட்’ (Reddit) சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படம் ஒன்று, கரடு முரடான அந்தக் கரையோரத்தில் காவல்துறை அதிகாரிகள் மூவர் தேடுதல் பணியில் ஈடுபடுவதைக் காட்டியது.

