போத்தல்கள், கேன்கள் ஆகியவற்றை மறுசுழற்சிக்குத் தரும் திட்டத்தின்கீழ், நான்கு மாதங்களில் தீவு முழுவதும் உள்ள தானியங்கி இயந்திரங்கள் மூலம் 5.5 மில்லியன் போத்தல்களும் கேன்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.
அவற்றில் 1 மில்லியன் வெற்றிகரமான பரிவர்த்தனைகள் மூலம் பொதுமக்களுக்கு வைப்புத் தொகை திரும்ப வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மரியம் ஜாஃபர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் ஜனில் புதுச்சேரி, பெரும்பாலான பரிவர்த்தனைகள் சுமுகமாக நடைபெற்றதாகக் கூறினார்.
இயந்திரக் கோளாறுகள் போன்ற சில பிரச்சினைகளுக்குத் திட்டத்தை நிர்வகிக்கும் ‘பிசிஆர்எஸ்’ நிறுவனம் உடனடியாகத் தீர்வு கண்டது.
மீட்கப்படாத வைப்புத் தொகைகள் குறித்து விளக்கிய அவர், அத்தொகை இத்திட்டத்தை நடத்துவதற்கான செலவுகளுக்குப் பயன்படுத்தப்படலாம் என்றார். இது பிற நாடுகளிலும் பின்பற்றப்படும் பொதுவான நடைமுறை என்றும், ‘பிசிஆர்எஸ்’ லாப நோக்கமற்ற அமைப்பு என்பதால் அதன் நிதி விவரங்களைத் தேசியச் சுற்றுப்புற வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
செப்டம்பர் 30ஆம் தேதி வரை இத்திட்டம் நிலைமாற்றக் கட்டத்தில் இருக்கும். அதன் பின்னர், 500 மில்லிலிட்டர் முதல் 3 லிட்டர் வரையிலான அனைத்து போத்தல்கள் மற்றும் கேன்களிலும் 10 காசு வைப்புத் தொகைக்கான முத்திரை இடம்பெற்றிருக்கும்.
மேலும், ஆரம்பக் கட்டத்தில் திட்டமிடப்பட்ட 1,070 தானியங்கி இயந்திரங்களும் தற்போது இயங்கி வருகின்றன. இதன் மூலம் 90 விழுக்காட்டுக்கும் அதிகமான வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்பாளர்கள் 5 நிமிட நடைதூரத்தில் இச்சேவையைப் பெற முடியும்.
இத்திட்டத்தின் முதல் ஆண்டில் சந்தையில் உள்ள போத்தல்கள் மற்றும் கேன்களில் 60 விழுக்காட்டையும் மூன்றாண்டுகளில் 80 விழுக்காட்டையும் மறுசுழற்சிக்குச் சேகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


