சுற்றுப்பயணிகள் மூலம் கிடைக்கக்கூடிய வருவாய், ஆண்டு அடிப்படையில், இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் 5.9 விழுக்காடு அதிகரித்தது.
அந்தக் காலாண்டில் மட்டும் சுற்றுப்பயணிகளால் $6.8 பில்லியன் வருவாய் கிடைத்தது.
அனைத்துலகப் பயணிகளின் சிங்கப்பூர் வருகை 14.8 விழுக்காடு அதிகரித்து 3.9 மில்லியனைத் தொட்டதால் அதற்கேற்ற வகையில் வருவாயும் அதிகரித்ததாக சிங்கப்பூர் பயணத் துறைக் கழகம் திங்கட்கிழமை (அக்டோபர் 21) கூறியது.
இருப்பினும், சுற்றுப் பயணிகள் செலவழித்த தொகை இவ்வாண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 15.6 விழுக்காடு குறைவு ஆகும்.
ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாம் காலாண்டு உள்ளிட்ட இவ்வாண்டின் முதல் பாதியில் $14.9 பில்லியன் சுற்றுப்பயண வருவாய் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கிடைத்த வருவாயைக் காட்டிலும் இது 19.6 விழுக்காடு அதிகம். மேலும், பயணிகளின் வருகையைப் பொறுத்தமட்டில், 2024 ஆண்டு தொடக்கம் முதல் ஜூன் வரை 8.2 மில்லியன் எனப் பதிவானது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 30.1 விழுக்காடு அதிகம்.
சிங்கப்பூரின் பயணத்துறை குறிப்பிடத்தக்க அளவில் மீட்சி கண்டு வருவதை இது உணர்த்துவதாக கழகத்தின் பேச்சாளர் கூறினார்.

