பூகிஸ் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் திங்கட்கிழமை (மார்ச் 27) காவல்துறையினர் ஐந்து பேரைக் கைது செய்தனர்.
ஆபத்தான ஆயுதத்தால் வேண்டுமென்றே காயம் விளைவித்து இருக்கிறார்கள் என்று நம்பப்படுவதையொட்டி அவர்கள் கைதானதாக காவல்துறை தெரிவித்தது.
கைதானவர்களில் இருவர் பெண்கள், மூவர் ஆடவர்கள். அவர்களுக்கு வயது 16 முதல் 23 வரை. கைதான மாதர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு இருந்தது.
அந்த 19 வயதுப் பெண் சுயநினைவுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அந்த மாதும் வேறு ஒரு 23 வயது மாதும் 16 வயதுப் பையனும் போதைப்பொருளைப் புழங்கி இருப்பதாகச் சந்தேகப்படுகிறது என காவல்துறை தெரிவித்தது.
கைதான இதர இரண்டு ஆடவர்களுக்கு வயது 18 மற்றும் 22 என்றும் தெரிவிக்கப்பட்டது.
உதவிக்கு வரும்படி காவல்துறைக்கு முற்பகல் 11.50 மணிக்கு தகவல் கிடைத்தது.
எண் 8 ஜாலான் குபூரில் உள்ள ரெஸ்ட் பூகிஸ் ஹோட்டலில் பல காவல்துறை அதிகாரிகளையும் தடயவியல் வல்லுநர்களையும் தாங்கள் கண்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அந்த ஹோட்டலுக்கு எதிரே இருக்கக்கூடிய காப்பிக்கடை ஒன்றின் நிர்வாகியான திருவாட்டி ஆலன் டோங், 42, இது பற்றி கூறியபோது, தான் தனது கடைக்கு நண்பகல் நேரத்தில் சென்றபோது அந்த ஹோட்டல் அருகே காவல்துறை அதிகாரிகளைப் பார்த்ததாக கூறினார்.
ஒருவரை கையில் விலங்கிட்டு ஹோட்டலுக்கு வெளியே அதிகாரிகள் கொண்டு வந்தததை தான் பார்த்ததாகவும் அவர் தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் இரண்டு ஆயுதங்கள் காணப்பட்டன. அவை கூரான ஆயுதங்கள் என நம்பப்படுகிறது.
காவல்துறையினர் தன்னை அணுகி சில பெயர்களையும் அடையாள அட்டை எண்களையும் காட்டி 'இவர்கள் யாரேனும் அந்த ஹோட்டலில் தங்கி இருந்தார்களா, உங்களுக்குத் தெரியுமா?' என்று தன்னைக் கேட்டதாக பக்கத்தில் உள்ள விடுதிகளில் ஒன்றில் வேலை செய்யும் ஒருவர் கூறினார்.
கைதானவர்களில் ஒருவரான 18 வயது நபர் இந்தோனீசியாவை சேர்ந்தவர் என்று நம்பப்படுவதாகவும் மற்றவர்கள் சிங்கப்பூரர்கள் என்றும் தன் பெயரைக் குறிப்பிட விரும்பாத அவர் மேலும் கூறினார்.
ரெஸ்ட் பூகிஸ் ஹோட்டல் ஊழியர்கள் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர். புலன்விசாரணை தொடர்வதாக காவல்துறை தெரிவித்தது.


