பொதுத் தேர்தல் 2025ல் போட்டியிடும் வேட்பாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும், சனிக்கிழமை (மே 3) தேர்தல் முடிவுகளைத் தெரிந்துகொள்ள ஐந்து விளையாட்டரங்குகளில் காத்திருக்கலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
அந்த ஐந்து விளையாட்டரங்கங்களில் மூன்று மக்கள் செயல் கட்சிக்கும் (மசெக), பாட்டாளிக் கட்சிக்கும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சிக்கும் (எஸ்டிபி) தலா ஒரு விளையாட்டரங்கம் ஒன்றுகூடும் இடங்களாக ஒதுக்கப்பட்டுள்ளன.
காவல்துறையின் தேர்தல் அனுமதி அலுவலகம் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
பிடோக் விளையாட்டரங்கம், புக்கிட் கோம்பாக் விளையாட்டரங்கம், இயோ சூ காங் விளையாட்டரங்கம் ஆகிய மூன்றும் மக்கள் செயல் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஒன்றுகூடும் இடங்களாகும்.
சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சிக்கான ஒன்றுகூடும் இடம் கல்வி அமைச்சின் இவான்ஸ் விளையாட்டரங்கு.
பாட்டாளிக் கட்சிக்கு சிராங்கூன் விளையாட்டரங்கம் ஒன்றுகூடும் இடமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
எந்தக் கட்சியையும் சாராத பொதுமக்களும் இந்த ஐந்து விளையாட்டரங்குகளில் கூடி, தேர்தல் முடிவுகளுக்குக் காத்திருக்கலாம்.
ஒன்றுகூடும் இடங்கள், வாக்களிப்பு முடிவடைந்த பிறகு இரவு 8 மணி முதல் இறுதித் தொகுதிக்கான தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதிலிருந்து 30 நிமிடங்கள் வரை திறந்திருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
2020 பொதுத்தேர்தலில் ஜூலை 10 வாக்களிப்பு நாள். மறுநாள் அதிகாலை 3.45 மணியளவில் இறுதி அதிகாரபூர்வ முடிவு வெளியானது.