போக்குவரத்துக் குற்றங்களை மீண்டும் மீண்டும் புரிந்த ஆடவர் மீது புதிதாகச் சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை (அக்டோபர் 17) ஹென்ரி ஆவ் யிங் லியாங் எனும் அந்த ஆடவர் அந்தக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது, கவனமின்றி வாகனம் ஓட்டியது, விபத்துக்குப் பிறகு உதவிசெய்யத் தவறியது, ஆபத்து, இடையூறு அல்லது சிரமம் ஏற்படுத்தக்கூடிய வகையில் வாகனத்தை இரண்டு முறை விட்டுச்சென்றது ஆகியவையே அந்த ஐந்து குற்றச்சாட்டுகள்.
இம்மாதம் (அக்டோபர் 2025) 29ஆம் தேதி ஆவுக்குத் தண்டனை விதிக்கப்படும்.
ஆறு மாதத்திற்கு முன்பு மதுபோதையில் வாகனத்தை ஓட்டியதற்காக அவர் பிடிபட்டார். கடந்த ஆறு ஆண்டுகளில் பல்வேறு போக்குவரத்துக் குற்றங்களை 32 வயது ஆவ் புரிந்திருக்கிறார்.
அதற்கு முன்பும் 2013க்கும் 2018க்கும் இடையிலும் பல போக்குவரத்துக் குற்றங்களுக்காக அவர் அதிகாரிகளிடம் சிக்கினார். வேக வரம்பை மீறியது, கவனக்குறைவாக மற்றவர்களின் நலனைக் கருத்தில்கொள்ளாமல் வாகனம் ஓட்டியது, போக்குவரத்து விதிமுறைகளை மதிக்கத் தவறியது முதலியவை அவற்றுள் அடங்கும்.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் $10,000 வரை அபராதமோ 12 மாதம்வரை சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படக்கூடும். மீண்டும் மீண்டும் அத்தகைய குற்றத்தைப் புரிந்தால் அதிகபட்சம் $20,000 அபராதமும் ஈராண்டுவரை சிறைத்தண்டனையும் விதிக்கப்படக்கூடும்.