சாங்கி விமான நிலையத்தின் தென்கிழக்காசிய வழித்தடங்களில் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் பயணிகளின் போக்குவரத்து ஐந்து விழுக்காடு குறைந்துள்ளது.
எரிபொருள் விலை உயர்வையும் மத்திய கிழக்குப் போருடன் தொடர்புடைய விநியோகச் சிக்கல்களையும் சமாளிக்க விமான நிறுவனங்கள் தென்கிழக்காசிய வட்டாரத்துக்கான விமானச் சேவைகளைக் குறைத்ததுவே அதற்கு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
இருப்பினும், மத்திய கிழக்கு மோதலால் உருவான உலகளாவிய எரிசக்தி விநியோகத் தடைகளுக்கு இடையிலும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இரண்டாம் காலாண்டில் சாங்கி விமான நிலையம் மீள்திறனுடன் விளங்கியது.
அந்த மூன்று மாதங்களில் ஏறத்தாழ 17.2 மில்லியன் பயணிகளை அது கையாண்டுள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்புநோக்க பயணிகளின் எண்ணிக்கை 1.5 விழுக்காடு குறைவு.
சிங்கப்பூரில் வந்திறங்கிய, இங்கிருந்து கிளம்பிச் சென்ற விமானங்களின் எண்ணிக்கையும் ஆண்டு அடிப்படையில் 92,400 என 1.3 விழுக்காடு சரிவைச் சந்தித்தது.
ஒட்டுமொத்த இவ்வாண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலத்தில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டு அடிப்படையில் 0.4 விழுக்காடு வளர்ச்சி கண்டிருந்ததாக சாங்கி விமான நிலையக் குழுமம் வெள்ளிக்கிழமை (ஜூலை 24) தெரிவித்தது.
தென்கிழக்காசியாவுக்கான சேவைகள் குறைக்கப்பட்டதால் பயணிகள் போக்குவரத்து ஐந்து விழுக்காடு சரிந்ததன் காரணமாக அந்த வளர்ச்சி குறைவாக இருந்தது.
இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் இங்கு வந்து சென்ற விமானங்களின் எண்ணிக்கை 188,000 ஆக இருந்தது என்றும் ஆண்டு அடிப்படையில் அதில் மாற்றமில்லை என்றும் குழுமம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சாங்கி விமான நிலையத்திற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான விமானப் போக்குவரத்து 8.7 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற தென்மேற்கு பசிபிக் வழித்தடங்களிலும் போக்குவரத்து கூடியது. ஆனாலும், அதன் விகிதம் மூன்று விழுக்காடு என்னும் மிதமான அளவிலேயே பதிவானது.
அந்த அதிகரிப்பு, சில விமான நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை அதிகரித்த அந்த வழித்தடங்களில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரித்ததன் விளையாக நிகழ்ந்தது என்றது ஆணையம்.
இரண்டாம் காலாண்டில் சாங்கி விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்துக்கான முதல் ஐந்து சந்தைகளாக சீனா, இந்தோனீசியா, ஆஸ்திரேலியா, மலேசியா, இந்தியா ஆகியவை இருந்தன.
அதேபோல, அதிக விறுவிறுப்புடன் காணப்பட்ட ஐந்து வழித்தடங்களும் கண்டறியப்பட்டன. கோலாலம்பூர், ஜக்கார்த்தா, பேங்காக், டென்பசார், தோக்கியோ ஆகியன அந்த வழித்தடங்கள் என்று ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

