வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாகப் பணம் அனுப்பிய குற்றத்திற்காக கூர்க்கா படையைச் சேர்ந்து ஐந்து அதிகாரிகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அவர்கள் ஒவ்வொருவரும் 103,473 வெள்ளிக்கும் $2.86 மில்லியன் வெள்ளிக்கும் இடைப்பட்ட அளவுக்கு சட்டவிரோதப் பணம் அனுப்பும் சேவையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பணம் அனுப்பும் சேவைச் சட்டத்தின்கீழ் குற்றம் புரிந்ததை ஒப்புக்கொண்ட ஐவருக்கும் வியாழக்கிழமை (செப்டம்பர் 5) தண்டனை விதிக்கப்பட்டது.
அவர்களில் சீத்தாராம் தாமாங், 40, என்பவர் $2.86 மில்லியனுக்கும் மேற்பட்ட பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதால் அவருக்கு ஆக அதிகமாக ஐந்து மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
டிக் பகதூர் குருங், 32 என்பவருக்கு 14 வாரச் சிறை விதிக்கப்பட்டது. அவர் $1 மில்லியனுக்கும் மேற்பட்ட தொகையில் சம்பந்தப்பட்டு இருந்தார்.
கங்கா பிரசாத் ராய், 43, என்பவருக்கு 10 வாரச் சிறையும் அசோக் குமார் தாபா மகார், 39, என்பவருக்கு 4 வாரச் சிறையும் விதிக்கப்பட்டது.
ஐந்தாமவரான மிங்மார் ஷெர்பா, 44, என்பவருக்கு $472,000 சட்டவிரோதப் பணம் அனுப்பும் சேவையில் ஈடுபட்டதற்காக ஏழு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் ஆறாவது நபராக பிராட்டிக் தாமாங், 41, என்பவரும் ஈடுபட்டு இருந்ததாக அரசுத்தரப்பு தெரிவித்தது. ஆனால், 2022 பிப்ரவரியில் ஓய்வுபெற்ற பின்னர் நேப்பாளத்திற்குத் திரும்பிய அவர், இன்னும் தலைமறைவாக உள்ளார்.