தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உபின் தீவைக் கட்டிக்காக்க கூடுதல் முயற்சிகள் அறிமுகம்

3 mins read
a3d8a20d-8024-4e5a-83d5-fba41db06547
புதுப்பிக்கப்பட்ட உபின் கம்பத்து வீடு. - படம்: தேசிய பூங்காக் கழகம்
multi-img1 of 2

உபின் தீவில் யாரும் குடியிருக்காத கம்பத்து வீடுகள், சமூக அல்லது வர்த்தகப் பயன்பாட்டிற்காகப் புதுப்பிக்கப்படும்.

அதன் முதற்கட்டமாக, அடுத்த ஆண்டு ஐந்து கம்பத்து வீடுகள் மறுசீரமைக்கப்படும். அவற்றின் மறுபயன்பாடு குறித்த பரிந்துரைகளை தேசிய பூங்காக் கழகத்திடமோ ‘உபின் நண்பர்கள்’ எனும் சமூகக் குழுவிடமோ மக்கள் எடுத்துரைக்கலாம்.

‘உபின் பள்ளி’ எனும் புதிய திட்டம்வழி, கூடுதல் மாணவர்கள் உபின் தீவுக்குக் கல்விப் பயணம் மேற்கொள்வர்.

“ஆண்டுதோறும் 250 மாணவர்களைச் சென்றடையும் நோக்கில் ஏழு பாடத்திட்டங்களோடு இம்முயற்சி தொடங்கும். கூடுதல் கல்வியாளர்கள் இணைந்ததும் இது எதிர்காலத்தில் விரிவடையக்கூடும்,” என்றது தேசிய பூங்காக் கழகம்.

சனிக்கிழமை (ஜூன் 22) நடந்த உபின் தினத்தன்று, உபின் திட்டத்தின் 10ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அத்திட்டத்தின் அடுத்தகட்ட முயற்சிகளாக தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ இவற்றை அறிவித்தார்.

‘உபின் நண்பர்கள்’ சமூகக் குழு, தேசிய வளர்ச்சி அமைச்சு, தேசிய பூங்காக் கழகத்துடன் இணைந்து இம்முயற்சிகளை வடிவமைத்தது.

உபின் திட்டம், உபின் தீவின் பண்பாட்டு, இயற்கை வளங்களைக் கட்டிக்காக்கும் நோக்கில் 2014ல் தொடங்கப்பட்டது.

“உபின் தீவு, சிங்கப்பூரின் பல்வகை உயிரினங்களுக்கு இருப்பிடமாக இருப்பதால், தீவின் பல சதுப்புநிலங்களில் நாம் புதிய, ஆழமான பல்லுயிர்த்தன்மை ஆய்வையும் நடத்துவோம்.

“இன்று நம் மத்தியில் காமன்வெல்த், மெரிடியன், நார்த் விஸ்தா உயர்நிலைப் பள்ளி மாணவர்களையும் சாங்ட தொடக்கப்பள்ளி மாணவர்களையும் காண்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார் அமைச்சர் லீ.

கல்வியமைச்சின் சுற்றுப்புறத் தலைமைத்துவத் திட்டத்திலும் ‘உபின் பள்ளி’ திட்டத்தின் முன்னோடியிலும் இம்மாணவர்கள் பங்குபெற்றுள்ளனர்.

நார்த் விஸ்தா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சதுப்புநிலங்களை மறுசீரமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
நார்த் விஸ்தா உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் சதுப்புநிலங்களை மறுசீரமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டனர். - படம்: தேசிய பூங்காக் கழகம்

“கடந்த பத்து ஆண்டுகளில் நாம் 30க்கும் மேற்பட்ட திட்டங்களில் ஒன்றாக செயல்பட்டுள்ளோம். உபின் தீவின் சமூகத்தினருடன் இணைந்து 15,000க்கும் மேற்பட்ட மரங்களை நட்டுள்ளோம். அருகிவரும் உயிரினங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம்,” என்றும் அமைச்சர் லீ எடுத்துரைத்தார்.

உபின் திட்டத்தின் அடுத்தகட்டத்தில் கூடுதல் அம்சங்கள்

தேசிய பூங்காக் கழகத்தின் இன மீட்புத் திட்டத்தின்கீழ், செம்பழுப்புத் தோலில் புள்ளிகள் கொண்ட ‘லவங்கப்பட்டைப் புதர்த் தவளை’ எனும் தவளையினம், உபின் தீவில் அறிமுகப்படுத்தப்படும். உயிரினங்களின் இருப்பிடங்களை மேம்படுத்த முயற்சிகள் தீவிரமாகும்.

லவங்கப்பட்டைப் புதர்த் தவளை, உபின் தீவில் அறிமுகப்படுத்தப்படும்.
லவங்கப்பட்டைப் புதர்த் தவளை, உபின் தீவில் அறிமுகப்படுத்தப்படும். - படம்: தேசிய பூங்காக் கழகம்

2024ல் 150க்கும் மேற்பட்ட உள்ளூர் இனங்களைச் சேர்ந்த 4,500க்கும் அதிகமான மரங்கள் படிப்படியாக உபின் தீவின் 18 இடங்களில் நடப்படும். அதன் தொடக்கமாக, 40க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை சமூகத்தினர் சனிக்கிழமை நட்டனர்.

கெளரவிக்கப்பட்ட ‘உபின் நண்பர்கள்’

இயற்கை ஆர்வலர்கள், மாணவர்கள், உபின் கிராமத்தினர், கல்வியாளர்கள் போன்றோர் அடங்கிய குழுவான ‘உபின் நண்பர்கள்’, 2014ல் ‘உபின் திட்டம்’ அறிமுகமானபோது தொடங்கப்பட்டது.

அக்குழுவில் தொடக்கத்திலிருந்து இருந்துள்ள 10 உறுப்பினர்களை அமைச்சர் லீ பாராட்டினார். அவர்களில், நிகழ்ச்சிக்கு வந்திருந்தோருக்கு ‘உபின் தீவு: நம் இதயம், ஆத்மா’ என்ற நூலை வழங்கி அமைச்சர் லீ கெளரவித்தார்.

2019ல் காலமான வனவிலங்கு ஆலோசகர் சுபராஜ் ராஜாதுரையின் மனைவி ஷாம்லா சுபராஜ், அவரது சார்பில் நூலைப் பெற்றுக்கொண்டார். திரு சுபராஜ், 35 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கப்பூரின் இயற்கை வளத்தைக் காக்கப் பாடுபட்டார்.

சுங்கை பூலோ சதுப்புநிலப் பகுதி, செக் ஜாவா சதுப்புநிலங்கள் முதலானவற்றைக் காப்பதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.

அவரது இயற்கைப் பயணத்தில் இணைந்த மனைவி ஷாம்லாவும் தொடர்ந்து ‘உபின் நண்பர்கள்’ குழுவில் முக்கியப் பங்கு வகிக்கிறார்.

குறிப்புச் சொற்கள்