வெவ்வேறு போக்குவரத்துக் குற்றங்களுக்காக ஐந்து வாகன ஓட்டிகள் மீது நீதிமன்றத்தில் புதன்கிழமை குற்றம் சுமத்தப்பட்டது.
இதில், போக்குவரத்துச் சமிக்ஞையில் சிவப்பு விளக்கு எரிவதைப் பார்க்காமல் வேகமாக வேனை ஓட்டிச்சென்று வயது முதிர்ந்த பாதசாரிகள் இருவர்மீது மோதி விபத்தை ஏற்படுத்திய 31 வயது உதின் ஹெலாலும் அடங்குவார்.
அந்த ஆடவர்மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் விசாரணையின்போது அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றொரு வழக்கில் 60 வயது லீ ஹ்வீ சூன், மீது வேனை கவனக்குறைவாக ஓட்டி 72 வயது சைக்கிளோட்டிமீது மோதிக் கடுமையான காயம் ஏற்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. குற்றத்தை ஒத்துக்கொண்ட லீக்கு $3,000 அபராதமும், 5 ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டது.
மூன்றாவது வழக்கில், 50 வயது முகமது நிசாம் முகமது ராணி மீது கவனக்குறைவாகக் காரையோட்டி எதிரே வந்த டாக்சியின் மீது மோதியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த விபத்தில் 50 வயது டாக்சி ஓட்டுநருக்கு விலா எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த வழக்கு செப்டம்பர் மாதம் மீண்டும் விசாரணைக்கு வரும் எனக் கூறப்பட்டது.
மார்ச் மாதம் நடந்த மற்றொரு வழக்கில் 45 வயது லீ ஹவ் ஜென், காலாங் பாய லேபார் விரைவுச்சாலையில் வழித்தடம் மாற்றும் போது கவனக்குறைவாக வாகனம் ஓட்டி எதிரே வந்த மோட்டார்சைக்கிளின்மீது மோதியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
குற்றத்தை ஒத்துகொண்ட அந்த ஆடவருக்கு $2,300 அபராதமும் வாகனம் ஓட்ட 15 மாதங்கள் தடையும் விதிக்கப்பட்டது.
2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த மற்றொரு விபத்தில் சாலையைக் கடக்க முயன்ற பாதசாரிமீது வாகனத்தை மோதி கடுமையாகக் காயம் ஏற்படுத்தியதாக 36 வயது சீ ஹாங் செங் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
சீயின் வழக்கு செப்டம்பர் மாதம் மீண்டும் விசாரணைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டது.

