தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரயில் சேவை பாதிப்பு; தாமதமாக வந்த மாணவர்களுக்குத் தேர்வு எழுத முழுமையான நேரம் வழங்கப்பட்டது

1 mins read
b3cf25f2-690a-4951-bae4-1ab630874653
செப்டம்பர் 26ஆம் தேதியன்று தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்கள் ‘பிஎஸ்எல்இ’ ஆங்கிலத் தேர்வு எழுதினர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் மின்சாரக் கோளாறு காரணமாக ரயில் சேவையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், செப்டம்பர் 26ஆம் தேதியன்று தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்கள் ‘பிஎஸ்எல்இ’ ஆங்கிலத் தேர்வு எழுதினர்.

ரயில் சேவை இல்லாத காரணத்தால் சில மாணவர்கள் தேர்வுக்கு தாமதமாக வர நேர்ந்தது. இதைக் கருத்தில் கொண்டு சிங்கப்பூர்த் தேர்வு, மதிப்பீட்டுக் கழகம், தாமதமாக வரும் மாணவர்களுக்கு உதவும் விதமாக அவர்களுக்கு தேர்வு எழுத முழுமையான நேரம் வழங்கியது.

வியாழக்கிழமையன்று கிட்டத்தட்ட 41,000 மாணவர்கள் தேர்வு எழுதினர். அவர்களில் 5 மாணவர்கள் தேர்வு எழுத தாமதமாக வந்ததாக மதிப்பீட்டுக் கழகம் தெரிவித்தது.

தேர்வு முடிவதற்கு முன்னரே அவர்கள் தேர்வு நிலையத்திற்கு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த ஐந்து மாணவர்களில் ஒரு மாணவர் மட்டும் வேறு தேர்வு நிலையத்தில் அமர்ந்து தேர்வு எழுதினார்.

தாமதமாக வரும் மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஏற்கெனவே விளக்கமளிக்கப்பட்டதாக மதிப்பீட்டுக் கழகம் தெரிவித்தது.

ரயில் சேவைத் தடையால் தாமதமாக வருபவர்கள், தேர்வு மையத்திற்குத் தெரிவிக்க வேண்டும். அத்துடன், அருகிலுள்ள தேர்வு மையம் அல்லது பள்ளிக்குச் செல்ல வேண்டும். தேர்வு மையங்களுக்குச் செல்வதற்கு மாணவர்கள் எம்ஆர்டி நிலைய ஊழியர்களையும் அணுகி உதவி கேட்கலாம் என்று மதிப்பீட்டுக் கழகம் மாணவர்களுக்கு நினைவூட்டியது.

குறிப்புச் சொற்கள்