பாய லேபாரில் சண்டையிட்ட 5 பெண்கள்மீது குற்றச்சாட்டுகள்

2 mins read
47c98079-1f51-495f-a0f8-fba2ce2a58f8
இயுன்ஹீ எலிசியம் என்பவர், ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த சண்டை தொடர்பான காணொளியிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள். - படங்கள்: ஃபேஸ்புக்/ இயுன்ஹீ எலிசியம்

பாய லேபார் ரயில் நிலையத்திற்கு அருகில் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டதற்காக, ஐந்து பெண்கள்மீது ஆகஸ்ட் 15ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஐவரும் இந்தோனீசியர்கள். ஸ்ரீயானி, 46, மேசாரொ, 35, சுலாஸ்திரி, 44, நிட்டா விடியா ராஹாயு, 34, சித்தி ருகாயா குஸ்னி, 47, ஆகியோருக்கு இடையே 15, பாய லேபார் ரோட்டில் மே 19ஆம் தேதி பிற்பகலில் சண்டை மூண்டது.

முன்னதாக ஸ்ரீயானிக்கும் சித்தி, சுலாஸ்திரி, நிட்டா ஆகியோருக்கும் இடையே சண்டை மூண்டதாக காவல்துறை அறிக்கை தெரிவித்தது.

மேசாரொ, ஸ்ரீயானியுடன் சேர்ந்துகொண்டதாகவும் அந்த இரண்டு குழுக்களுக்கும் இடையே சண்டை மூண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட 3 நிமிடக் காணொளியில், அந்தப் பெண்கள் கத்துவதையும், ஒருவர் மற்றொருவருடன் சண்டையிடுவதையும் காணமுடிந்தது.

பிற்பகல் 2.55 மணிவாக்கில் சண்டை குறித்து காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. நான்கு பேர் அதே நாளில் கைது செய்யப்பட்டனர். சித்தி ஒரு வாரத்திற்குப் பின்னர் கைதானார்.

ஸ்ரீயானி, சுலாஸ்திரி, சித்தி ஆகிய மூவரும் குற்றத்தை ஒப்புக்கொள்ளப்போவதாகத் தெரிவித்தனர். குற்றத்தை ஒப்புக்கொள்ள இம்மாத பிற்பாதியில் அவர்களுக்குத் தேதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

நிட்டாவும் மேசாரொவும் குற்றத்தை ஒப்புக்கொள்ளத் திட்டமிடுவதாகக் கூறினர். இருப்பினும், அவர்கள் வழக்கறிஞர்களை நாடப்போவதாகத் தெரிவித்தனர். அவர்களுக்கான அடுத்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 26ஆம் தேதி நடைபெறும்.

சண்டைக்கான குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஓராண்டுவரை சிறைத் தண்டனை, $5,000 வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்