இரண்டு பிள்ளைகளைத் துன்புறித்திய குற்றம் தொடர்பில் ஏற்கெனவே 35 ஆண்டுகால சிறைத் தண்டனையை நிறைவேற்றிவரும் ஆடவரின் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டுள்ளது. ஆடவரின் துன்புறுத்தலால் அவரது ஐந்து வயது மகள் இறந்தார்.
தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை 25.5லிருந்து 30 ஆண்டுகள் வரை குறைக்கும்படி அந்த 45 வயது ஆடவர் செய்த மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டதை அடுத்து அவரது சிறைத் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.
ஆடவரின் துன்புறுத்தலிலிருந்து உயிர்தப்பிய மகனின் அடையாளத்தை மறைக்க ஆடவர் பெயர் வெளியிடப்படவில்லை.
ஆடவரின் வழக்கறிஞர் மெர்வின் சியோங் ஆயுள் தண்டனை விதிக்கப்பட அவசியம் எதுவும் இல்லை என்று கூறினார்.
ஆடவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அரசுத் தரப்பு மேல்முறையீடு செய்யப்படவில்லை என்றும் 35 ஆண்டு சிறைத் தண்டனை கடுமையானது என்றும் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தலைமையில் மூன்று நீதிபதிகள் கொண்ட நீதிமன்றம் ஆடவரின் மேல்முறையீட்டோடு ஆடவர் செய்த குற்றத்துக்காக வருத்தப்பட்டார் என்ற வாதத்தையும் நிராகரித்தது.
ஆயுள் தண்டனை விதித்ததற்கான விரிவான காரணங்களுடன் பின்னொரு நாள் நீதிமன்றம் விளக்கம் அளிக்கும் என்று திரு மேனன் குறிப்பிட்டார்.

