எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த ஆக இளைய சிங்கப்பூரரான 5 வயது சிறுவன்

2 mins read
ef741765-c6e2-454a-9e1b-066a37b4a2e8
2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரு ஸிக்ரி அலியும் அவரது 5 வயது மகன் அபியன் இம்தியாஸ் இர்கிசும் எவரெஸ்ட் மலையடிவார முகாமில். - படம்: ஸிக்ரி அலி
multi-img1 of 2

பலத்த காற்றையும் பூஜ்ஜியத்துக்குக் கீழ் 14 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையையும் எதிர்த்துப் போராடி, பாலர்பள்ளி மாணவர் அபியன் இம்தியாஸ் இர்கிஸ், எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்துள்ள ஆக இளைய சிங்கப்பூரர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார்.

ஐந்து வயது பூர்த்தியாகி இருக்கும் அபியன், அவரது தந்தை ஸிக்ரி அலியுடன், 41, ஏப்ரல் 29ஆம் தேதியன்று, நேப்பாளத்தில் 5,364 மீட்டர் உயரத்தில் உள்ள எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்தார்.

கடலுக்கு 2,800 மீட்டர் உயரத்திற்குமேல் அமைந்துள்ள நேப்பாள நகரமான ‘லுக்லா’விலிருந்து அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடங்கினர். அந்தப் பயணம் அவர்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் இரண்டு நாள்கள் முன்னதாகவே, எட்டு நாள்களிலேயே நிறைவேறியது.

எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்த பிறகு ‘லுக்லா’ நகரத்திலிருந்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் குறுஞ்செய்தி வழியாகப் பேசினார், திரு ஸிக்ரி. தமது மகனோடு இந்தச் சாதனையைப் படைத்ததில் தாம் பெருமைகொள்வதாகவும் கொடுத்துவைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

“இது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, விடாமுயற்சியின் விளைவு. உலகின் ஆக உயரமான சிகரத்தின் அடித்தளத்தில் நின்ற தருணத்தில், மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அதுவும், தந்தை-மகன் குழுவாக இந்தச் சாதனையைப் படைத்ததில், எனக்கு மிகுந்த பெருமை. நன்றியுணர்வும் அடக்கமும் என்னைச் சூழ்ந்துள்ளது,” என்று திரு ஸிக்ரி கூறினார்.

தமது 41 வயது மனைவி வார் வார் லுவின் துன்னுடன் சிங்கப்பூரில் யோகா பள்ளி ஒன்றை நடத்திவருகிறார் திரு ஸிக்ரி. அவர்களுக்கு மேலும் பத்து வயது மகளும், மூன்று வயது மகனும் உள்ளனர்.

எவரெஸ்ட் மலையடிவார முகாமைச் சென்றடைந்ததும், பாலர் பள்ளி இரண்டாம் வகுப்பில் பயிலும் அபியன் தமக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகக் கூறியதாய் திரு ஸிக்ரி சொன்னார்.

இதற்கு முன்னதாக, சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில், ஆறு வயது ஆறு மாதங்கள் நிரம்பிய ஒம் மதன் கார்க் இடம்பெற்றிருந்தார். அவர் 2022ஆம் ஆண்டில் தமது பெற்றோருடன் எவரெஸ்ட் மலையடிவார முகாமிற்குச் சென்றிருந்தார்.

அபியனின் புதிய சாதனையை சிங்கப்பூர் சாதனைப் புத்தகம், ஏப்ரல் 29ஆம் தேதி வெளியிடப்பட்ட ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் உறுதிப்படுத்தியது.

View post on Instagram
 
குறிப்புச் சொற்கள்