புக்கிட் மேரா வட்டாரத்தில் உள்ள 50 மில்லியன் வெள்ளி மதிப்பிலான வணிகக் கட்டடம் விற்பனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
32,000 சதுர அடி கொண்ட அந்தக் கட்டடம், 2 ஜாலான் கீலாங் பாராட்டில் உள்ளது. அது டிசம்பர் 2ஆம் தேதி விற்பனைத் தளம் ஒன்றில் 50 மில்லியன் வெள்ளிக்கு விற்கப்படுவதாகப் பதிவு செய்யப்பட்டது.
பதிவிட்ட மூன்று நாளுக்குள் அந்தக் கட்டடம் விற்பனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. எதற்காக அது நீக்கப்பட்டது என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.
கம்போடியத் தொழிலதிபர் சென் ஸிக்கு தொடர்புடைய சொத்தாக அந்தக் கட்டடம் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
சென் ஸி சிங்கப்பூரிலும் அமெரிக்காவிலும் மோசடிக் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். அவர் பல மில்லியன் வெள்ளியை மோசடிமூலம் ஈட்டியதாக நம்பப்படுகிறது. அதன் காரணமாக அவருக்குத் தொடர்புடைய சொத்துகள் முடக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கட்டடத்தின் உரிமையாளர் 25 வயது சென் சியான்ஜுவான் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. அவர் இப்போது சிங்கப்பூர் காவல்துறையின் விசாரணைக்கு உதவி வருகிறார்.
திருவாட்டி சியான்ஜுவானின் தந்தை டான் யூ கியாட், 49, காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
கடந்த மாதம் குங் சாங் ரோட்டில் உள்ள டானின் அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனையிட்டனர். அவருக்கும் சென் ஸிக்கும் தொடர்பிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
சென் ஸி, சீனாவில் பிறந்தவர். அவர் பிரின்ஸ் குழுமத்தை வழிநடத்துகிறார். அது நிதிச் சேவை மற்றும் சொத்து மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
கடந்த அக்டோபர் மாதம் 38 வயதான சென் ஸிமீது பிரிட்டனிலும் மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவர் கம்போடியாவில் மோசடி நிலையத்தை நடத்துவதாகத் தெரிவிக்கப்பட்டது.
தற்போது சென் ஸி தலைமறைவாக உள்ளார்.

