தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இன்றுமுதல் ஒவ்வொரு சிங்கப்பூர் குடும்பத்துக்கும் $500 சிடிசி பற்றுச்சீட்டுகள்

2 mins read
da948c30-1048-4847-a1ff-298db42bf395
நீ சூன் சவுத் சமூக மன்றத்தில் நிகழ்ந்த சிடிசி பற்றுச்சீட்டு அறிமுக நிகழ்வுக்குப் பிறகு சோங் ஃபிஷ் டீலரின் தலைமை நிர்வாக அதிகாரி (இடது) திரு ஷான் லிம்மைச் சந்தித்துப் பேசிய (இடமிருந்து) பிரதமர் லாரன்ஸ் வோங், மேயர் லோ யென் லிங், மேயர் டெனிஸ் புவா. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஒவ்வொரு சிங்கப்பூர் குடும்பமும் செவ்வாய்க்கிழமை (மே 13) முதல் $500 பெறுமானமுள்ள சமூக மேம்பாட்டு மன்றப் (சிடிசி) பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க பற்றுச்சீட்டுகள் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பற்றுச்சீட்டுகளில் பாதியை ($250) திட்டத்தில் பங்கெடுக்கும் பேரங்காடிகளில் பயன்படுத்தலாம்.

எஞ்சிய பற்றுச்சீட்டுகளை திட்டத்தில் பங்கெடுக்கும் உணவங்காடி நிலையங்களிலும் குடியிருப்புப் பேட்டைகளில் உள்ள கடைகளிலும் பயன்படுத்தலாம்.

சிங்கப்பூரர்கள் go.gov.sg/cdcv எனும் இணையப்பக்கத்துக்குச் சென்று பற்றுச்சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்துவதற்கான இறுதி நாள் இவ்வாண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி.

சிடிசி பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுவது இது எழாவது முறை.

கடந்த ஜனவரி மாதம் $300 பெறுமானமுள்ள பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.

அந்தப் பற்றுச்சீட்டுகளையும் இவ்வாண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்குள் பயன்படுத்திவிட வேண்டும்.

ஜூலை மாதத்தில் எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகளும் வழங்கப்படும்.

21 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய ஒவ்வொரு சிங்கப்பூரருக்கும் $600 பெறுமானமுள்ள பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.

60 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய ஒவ்வொரு மூத்தோருக்கும் $800 பெறுமானமுள்ள பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.

இந்நிலையில், தேவைப்படும் வரை சிடிசி பற்றுச்சீட்டுகள் தொடர்ந்து வழங்கப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் உறுதியளித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை (மே 13) நீ சூன் சவுத் சமூக மன்றத்தில் ஆக அண்மைய பற்றுச்சீட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.

அந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் வோங், இவ்வாண்டு தாக்கல் செய்யப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட முழுமையான ஆதரவுத் தொகுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக பற்றுச்சீட்டுகள் இடம்பெறுவதாக கூறினார்.

2026ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் $300 மதிக்கத்தக்க பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்.

லைஃப்எஸ்ஜி வழங்குதொகை, எடுசேவ் நிரப்புதொகை, யு-சேவ் கழிவுகள் போன்ற ஆதரவும் சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்படும்.

“வீடமைப்பு, சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, ஓய்வுக்காலம் போன்றவற்றை மறுஆய்வு செய்து, புதுப்பித்து வலுப்படுத்தியுள்ளோம். இதைத் தொடர்வோம். இந்தக் கொள்கைப் புதுப்பிப்புகள், மாற்றங்கள், மேம்பாடுகள் சிங்கப்பூரர்களுக்கு அவர்களது ஒவ்வொரு வயதுப் பிரிவிலும் உதவும்,” என்று பிரதமர் வோங் கூறினார்.

நிதி தொடர்பான விவகாரங்களில் பொறுப்புடன் நடந்துகொள்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை தருவதாக திரு வோங் குறிப்பிட்டார்.

பற்றுச்சீட்டுத் திட்டங்களின் நீடித்த நிலைத்தன்மை, பொருள் சேவை வரி அதிகரிப்பின் அவசியம் ஆகியவை குறித்து அவர் பேசினார்.

“அரசாங்கம் கூடுதலாகச் செலவு செய்யும்போது அது சிங்கப்பூரர்களுக்குப் பலன் தர வேண்டும் என்பதில் கவனமாக உள்ளது,” என்றார் பிரதமர் வோங்.

குறிப்புச் சொற்கள்