நான்கு எம்ஆர்டி பாதைகளில் 500க்கும் மேற்பட்ட மின்படிக்கட்டுகள் புதுப்பிக்கப்படும்

நான்கு எம்ஆர்டி பாதைகளில் 500க்கும் மேற்பட்ட மின்படிக்கட்டுகள் புதுப்பிக்கப்படும்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Nov 2026 - 12:59 pm

2 mins read

பயணிகளில் பாதுகாப்பு, நம்பகத்தன்மை, வசதி ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் ரயில் நிலயங்களில் உள்ள 500க்கும் மேற்பட்ட மின்படிக்கட்டுகள் புதுப்பிக்கப்படவுள்ளன.

நான்கு பெருவிரைவு ரயில் (எம்ஆர்டி) பாதைகளில் உள்ள நிலையங்களில் மின்படிக்கட்டுகள் புதுப்பிக்கப்படவுள்ளன.

டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கி, வடக்கு-தெற்குப் பாதை, கிழக்கு-மேற்குப் பாதை, வடகிழக்குப் பாதை ஆகிய மூன்று ரயில் பாதைகளில் உள்ள 290 மின்படிக்கட்டுகள் படிப்படியாகப் புதுப்பிக்கப்படும்.

இப்பணிகள் 2032க்குள் நிறைவடையத் திட்டமிடப்பட்டுள்ளது. நிலப் போக்குவரத்து ஆணையம், எஸ்எம்ஆர்டி, எஸ்பிஎஸ் டிரான்சிட் ஆகிய நிறுவனங்கள் வியாழக்கிழமை (நவம்பர் 19) வெளியிட்ட கூட்டறிக்கையில் இத்தகவலைத் தெரிவித்துள்ளன.

இப்புதுப்பிப்புத் திட்டம், எஸ்எம்ஆர்டி முன்னர் மேற்கொண்ட 231 மின்படிக்கட்டுகளின் மேம்பாட்டுப் பணிகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது.

முந்தைய திட்டத்தின்கீழ் மேம்படுத்துவதற்கு உரிய காலத்தை எட்டாத 83 மின்படிக்கட்டுகளை இப்புதிய திட்டம் உள்ளடக்கும்.

மேலும், ரயில் நிலையங்களை ஒட்டியுள்ள நடையர் மேம்பாலங்களில் அமைந்துள்ள மின்படிக்கட்டுகளும் இத்திட்டத்தின் ஓர் அங்கமாக மேம்படுத்தப்படும்.

வட்ட ரயில் பாதையில் உள்ள மேலும் 237 மின்படிக்கட்டுகளுக்கான மேம்பாட்டுப் பணிகள் பிந்தைய ஒரு தேதியில் தொடங்கும் என்று கூட்டறிக்கை குறிப்பிட்டது.

புதிய வசதிகள்

புதிதாக மேம்படுத்தப்படும் மின்படிக்கட்டுகளில் பாதுகாப்பு அறிவிப்புகளை வெளியிடுவதற்கான உள்ளமைக்கப்பட்ட குரல் அமைப்பு இடம்பெறும்.

நெரிசல் மிகுந்த நேரங்களில் வழக்கமான வேகத்திலும் நெரிசலற்ற நேரங்களில் எரிசக்தியைச் சேமிக்கவும் மூத்தோரின் பாதுகாப்புக்காகவும் மின்படிக்கட்டுகள் மெதுவான வேகத்திலும் இயங்கும்.

ஒவ்வொரு மின்படிக்கட்டையும் புதுப்பித்து மேம்படுத்த கிட்டத்தட்ட நான்கு முதல் ஐந்து மாதங்கள் வரை ஆகும் என்று கூட்டறிக்கை தெரிவித்தது.

பயணிகளுக்கு மாற்றுவழிகள்

பணிகள் நடைபெறும்போது இடையூறுகளைக் குறைக்கும் நோக்கில், ரயில் நடைமேடைகளிலிருந்து பயணிகள் கூடுமிடத்திற்கும் அங்கிருந்து நுழைவாயில்களுக்கும் மேல்நோக்கிச் செல்லும் ஒரு மின்படிக்கட்டாவது தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். மின்தூக்கிகளும் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும்.

ரயில் நிலையங்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டுப் பணிகளின்போது, பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைத்து உரிய மாற்று ஏற்பாடுகளை வழங்குவதில் சம்பந்தப்பட்ட அமைப்புகள் கவனம் செலுத்தியுள்ளன.

இதன்வழி, மேம்பாட்டுப் பணிகள் நடைபெறும் காலத்திலும் பயணிகள் தடையின்றிச் சென்றுவர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்